மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, பிரபல மலையாள நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17–ந்தேதி இரவு படப்பிடிப்பு ஒன்றை முடித்து விட்டு திரும்பியபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அப்போது, அந்த கும்பல் காரிலேயே பாவனாவை பாலியல் தொல்லை செய்தனர். மேலும், இந்த சம்பவத்தை அந்த கும்பல் தங்களது செல்போனில் விடியோ எடுத்து வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனி என்ற சுனில்குமார் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப், அவரது மேலாளர் அப்புண்ணி, இயக்குநர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்திற்கு நடிகர் திலீப் முக்கிய மூளையாக செயல்பட்டதும், அதற்காக பல்சர் சுனி-க்கு கோடிக்கணக்கில் திலீப் பணத்தை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்ததாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகர் திலீப், கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதன்பின், நடிகர் திலீப் தனக்கு ஜாமீன் மனுக்கள், கொச்சின் நீதிமன்றத்தில் 2 முறையும், அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒருமுறையும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால், அங்கமாலி நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி நடிகர் திலீப் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்குவது வழக்கின் விசாரணையை பாதிக்கும் என காவல் துறையில் கூறப்பட்டதையடுத்து, அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்தது.
இவ்வாறு, 5 முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், நடிகர் திலீப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் செவ்வாய் கிழமை ஜாமீன் வழங்கியது. கைதாகி 85 நாட்களுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என திலீப்பின் வழக்கறிஞர் வாதிட்டதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. நடிகர் திலீப் தன்னுடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், மேலும், ஒரு லட்ச ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனிடையே, இவ்வழக்கின் விசாரணை இன்னும் 3 வார காலத்தில் முடிவடையும் என காவல் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.