மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முதல் மூத்த தலைவர் ஷோபா கரந்த்லாஜே வரையிலான பா.ஜ.க தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வியாழக்கிழமை கலபுர்கியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை ‘விஷப் பாம்புடன்’ ஒப்பிட்டார்.
“இதைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்… மோடி விஷப்பாம்பு போன்றவர். விஷமா இல்லையா என்று சோதிக்க சுவைக்காதீர்… சுவைத்தால் நீங்கள் செத்துப்போய்விடுவீர்கள். மோடி போன்ற ஒரு நல்ல மனிதர் உங்களுக்குக் கொடுத்ததால் இது விஷம் அல்ல என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நீங்கள் அதை சுவைத்தால் நீங்கள் தரையில் இறந்து கிடப்பீர்கள்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
இருப்பினும், பின்னர், இந்த கருத்து குறித்து விளக்கமளித்து மல்லிகார்ஜுன கார்கே ட்வீட் செய்துள்ளார்: “எனது பேச்சு பிரதமர் மோடிக்கானதோ அல்லது வேறு எந்த நபருக்கானதோ அல்ல… ஆனால், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் சித்தாந்தத்திற்கானது. பிரதமர் மோடியுடனான எங்கள் சண்டை தனிப்பட்ட சண்டை அல்ல. இது ஒரு கருத்தியல் போராட்டம். எனது நோக்கம் யாருடைய மனதையும் புண்படுத்துவது அல்ல, தெரிந்தோ தெரியாமலோ ஒருவரின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டால், அது எனது நோக்கமல்ல.” என்று கூறினார்.
மல்லிகார்ஜுன கார்கே மேலும் கூறுகையில், “நண்பர்கள் மற்றும் எதிரிகளிடம் அரசியல் நேர்மையின் நெறிமுறைகளையும் மரபுகளையும் நான் எப்போதும் பின்பற்றி வருகிறேன். என் வாழ்வின் கடைசி மூச்சு வரை அதை செய்வேன். நான் உயர் பதவியில் இருப்பவர்களைப் போல தனிநபர்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் கேலி செய்வதில்லை. ஏனென்றால், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் வலிகளையும் துன்பங்களையும் நானும் பார்த்திருக்கிறேன். ஐம்பதாண்டுகளாக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் தலைவர்களின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை நான் எப்போதும் எதிர்க்கிறேன். அவருடைய அரசியலுக்கு எதிராகவே எனது அரசியல் போராட்டம் அன்றும், இன்றும், எப்போதும் இருக்கும்.” என்று கூறினார்.
இந்நிலையில் அவரது கருத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “காங்கிரஸ் மல்லிகார்ஜுன் கார்கேவை கட்சித் தலைவராக்கியது. ஆனால், யாரும் அவரை தலைவராகக் கருதவில்லை. எனவே, ராகுல் காந்தி குடும்பத்தின் கவனத்தைப் பெறுவதற்காக சோனியா காந்தி கூறியதை விட மோசமான அறிக்கையை வெளியிட நினைத்துள்ளார்” என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்திய மக்கள் பிரதமர் மோடியை இரண்டு முறை ஆட்சி செய்வதற்கு வாக்களித்துள்ளனர். இதுபோன்ற அறிக்கைகள் நாட்டை அவமதிக்கும் செயல் என்பதை அரசியல்வாதிகள் நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்ற கருத்துக்காக காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று கூறினார்.
இந்த கருத்துக்கு பதிலளித்த பா.ஜ.க மூத்த தலைவர் ஷோபா கரந்த்லாஜே, “மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் தலைவர். அவர் உலகிற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவரை உலகம் முழுவதும் மதிக்கிறது. பிரதமருக்கு இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது காங்கிரஸ் எந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. அவர் (கார்கே) நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று கூறினார்.
224 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் (2,429 ஆண் வேட்பாளர்கள், 185 பெண் வேட்பாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை) போட்டியிடுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“