எனது மொபைல் எண் முடக்கப்பட்டால் கூட கவலையில்லை. என்னுடைய மொபைலுடன் ஆதார் எண்ணை இணைக்கமாட்டேன் என மம்தா பானர்ஜி கூறினார்.
அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய, மாநில அரசுகள் கட்டாயப்படுத்தி வருகின்றன. இதற்கான காலக்கெடு டிசம்பர் 31 என இருந்தது. இது இப்போது மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைப்பு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் மத்திய அரசு இதை தெரிவித்துள்ளது.
தவிர, செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயமாகிறது. இது தொடர்பாக நாடு முழுவதும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தச் சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இது குறித்து பரபரப்பாக பேசினார்.
மம்தா பானர்ஜியின் பேச்சு வருமாறு : ‘மக்களின் உரிமையிலும் அந்தரங்கத்திலும் மத்திய அரசு குறுக்கிடுகிறது. ஆதார் எண்களை யாருடைய மொபைல் எண்ணுடனும் இணைக்கப்படக் கூடாது. அது தனி மனித உரிமைக்கு விரோதமானது. கணவனும் மனைவியும்கூட செல்போனில் சுதந்திரமாக பேச முடியாத சூழலை அது உருவாக்கும்.
மிக மோசமான இந்த திட்டத்தை மக்களிடம் திணிக்கக் கூடாது. எனது மொபைல் எண் முடக்கப்பட்டால் கூட கவலையில்லை. என்னுடைய மொபைலுடன் ஆதார் எண்ணை இணைக்கமாட்டேன்.
நாட்டின்மீது சர்வாதிகாரப் போக்கை மத்திய அரசு கட்டவிழ்த்து விடுகிறது. அரசுக்கு எதிராக யாரும் குரல் எழுப்ப முடியாது. அப்படி செய்தால் ஐ.டி, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணைகள் தொடங்கும். ஆனால் எங்கள் தலைவர்களை சிறைக்கு அனுப்பினாலும் நாங்கள் பாஜக-வை எதிர்ப்போம். நாங்கள் கோழைகள் அல்ல.
பண மதிப்பு நீக்கம் பெரிய ஊழல். அதற்கு கண்டிப்பாக விசாரணை தேவை. மன்மோகன் சிங் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் பணமதிப்பு நீக்கத்தை விமர்சிக்கின்றனர். அவர்கள் அனைவரும் தவறாக பேசுகிறார்களா? எங்கள் கட்சியும் பணமதிப்பு நீக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளான நவம்பர் 8-ம் தேதியைக் கருப்பு தினமாக அனுசரிக்கும்’ என கூறினார் மம்தா.
ஒரு மாநிலத்தின் முதல்வரே மத்திய அரசின் உத்தரவை ஏற்று மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க மாட்டேன் என கூறியிருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.