ஆம்புலன்ஸ் தராத அரசு மருத்துவமனை: பேத்தியின் சடலத்தை தோளில் தூக்கிச்சென்ற தாத்தா

அங்கிருந்த ஊடகங்கள் சில ஒன்றிணைந்து தனியார் ஆம்புலன்ஸில் உடலை ஏற்றிச்செல்ல ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.மருத்துவமனை நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ஹரியானா மாநிலத்தில் உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோன 9 வயது சிறுமியை கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவில்லை என குற்றம்சாட்டி, அச்சிறுமியை தன் தோள் மீது அவருடைய தாத்தா தூக்கிச்சென்ற காட்சி காண்போரை கலங்க செய்வதாக இருந்தது.

ஃபரிதாபாத்தை சேர்ந்த லஷ்மி என்ற 9 வயது சிறுமிக்கு கடந்த வியாழக்கிழமை கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணம் அதிகமாக இருந்ததால், அச்சிறுமியின் தாத்தா ஹர்தேவ் அவரை ஃபரிதாபாத்தில் உள்ள பாட்ஷா கான் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை காலை அழைத்து சென்றார்.

அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், அச்சிறுமி மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி இறந்தவுடன், உடலை அங்கிருந்து உடனடியாக கொண்டு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து, சிறுமியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்த சொற்ப பணமும் தனியார் மருத்துவமனையில் செலுத்தப்பட்டு விட்டதால், தனியார் ஆம்புலன்ஸ்-க்கு கூட அவர்களிடம் பணம் இல்லை. இதனால், சிறுமியின் தாத்தா உடலை தன் தோளில் தூக்கியவாறு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

இதையடுத்து, அங்கிருந்த ஊடகங்கள் சில ஒன்றிணைந்து தனியார் ஆம்புலன்ஸில் உடலை ஏற்றிச்செல்ல ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்க முன்வரவில்லை.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒடிஷாவில் பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவர் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வசதி செய்து தராததால் தன் மனைவியை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் தன் தோளிலேயே சுமந்து இறுதி சடங்குகளை செய்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் பரவலாக நிகழும் நிலையில், அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close