scorecardresearch

சத்தீஸ்கரில் முன்னாள் காதலியின் திருமணப் பரிசில் வெடிகுண்டு வைத்தவர் கைது; மணமகன், சகோதரர் மரணம்

சத்தீஸ்கரில் திருமணப் பரிசாக வந்த ஹோம் தியேட்டரில் வெடிகுண்டு வெடித்து மணமகன், சகோதரர் மரணம்; மணமகளின் முன்னாள் காதலர் கைது

arrest
பிரதிநிதித்துவ படம்

சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் தனது முன்னாள் காதலியின் கணவருக்கு திருமண பரிசாக வழங்கப்பட்ட ஹோம் தியேட்டரில் வெடிகுண்டு வைத்ததாகக் கூறப்படும் 33 வயது நபரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்தியப் பிரதேச எல்லைக்கு அருகில் உள்ள நக்சல்கள் அதிகம் உள்ள சமாரி கிராமத்தில் திங்கள்கிழமை நடந்த வெடி விபத்தில் தனது சகோதரருடன் சேர்ந்து பரிசைத் திறந்த மணமகனும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் உள்ள சாப்லா கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ மெக்கானிக் சஞ்சு என்கிற சர்ஜு மார்க்கம் (33) என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். சர்ஜூ மார்கம் முன்பு குவாரியில் பணிபுரிந்தவர், அங்கு வெடிகுண்டுகளை எப்படி செய்வது என்று கற்றுக்கொண்டவர் என்று போலீஸார் தெரிவித்தனர். அவர் மியூசிக் சிஸ்டமான ஹோம் தியேட்டரை வாங்கிய பாலகாட்டில் உள்ள கடையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: தண்டனை வழங்கிய நீதிமன்றத்திற்கு பர்னிச்சர்கள்… மகாராஷ்டிரா மாநில கைதிகளின் கைவண்ணம்!

இறந்த ஹேமேந்திர மேராவி, 25 வயதான ஒரு விவசாயி, அவருக்கு மார்ச் 31 அன்று திருமணம் நடந்தது.

ஹேமேந்திர மெராவியும் அவரது மூத்த சகோதரர் ராஜ்குமாரும் ஹோம் தியேட்டரை பிளக் செய்து ஸ்விட்ச் ஆன் செய்த உடனேயே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கபிர்தாம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மனிஷா தாக்கூர் தெரிவித்தார். ஹேமேந்திர மெராவி சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது சகோதரர் மருத்துவமனையில் இறந்தார். ஒன்றரை வயது சிறுமி மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

விசாரணையில், ஹேமேந்திர மெராவியின் மனைவி, 2020 முதல் திருமணமாகி ஆறு மற்றும் நான்கு வயதில் இரண்டு மகன்களைக் கொண்ட சர்ஜூ மார்க்கம் என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். “சர்ஜூ மார்க்கம் முதலில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று ஹேமேந்திர மெராவியின் மனைவியிடம் பொய் சொல்லி பழகியுள்ளான். பின்னர் உண்மையை தெரிந்துக் கொண்ட ஹேமேந்திர மெராவியின் மனைவி, அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். ஆனால், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சர்ஜூ மார்க்கம் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்” என்று போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட சர்ஜூ மார்க்கம், ஹேமேந்திர மெராவியையும் மிரட்டியதாகவும், இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் லால் உமேத் சிங் தெரிவித்தார்.

“சர்ஜூ மார்க்கம் ஹோம் தியேட்டரில் வெடிகுண்டைப் பொருத்தி, மற்ற பரிசுகளுடன் மண்டபத்தில் வைத்திருக்கிறார். அவர் அம்மோனியம் நைட்ரேட், பெட்ரோல் மற்றும் பட்டாசுகளில் இருந்து எடுக்கப்பட்ட வெடிப் பொருட்களை பயன்படுத்தியுள்ளார். சந்தேகம் வராமல் இருக்க பரிசாக பொருளாக மாற்றி வைத்துள்ளார். ஹோம் தியேட்டர் ஆன் செய்யப்பட்டபோது குண்டுவெடிப்பு ஏற்பட்டது,” என்று காவல்துறை கண்காணிப்பாளர் லால் உமேத் சிங் கூறினார்.

சர்ஜூ மார்கத்திற்கு முந்தைய குற்றப் பதிவுகள் ஏதேனும் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர், ஆனால் அவர் எந்த நக்சல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சர்ஜூ மார்க்கம் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 302 (கொலை), 307 (கொலை முயற்சி), மற்றும் 326 (கடுமையான காயம்) மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Man who planted bomb in wedding gift of ex lover in chhattisgarh arrested

Best of Express