Advertisment

மிசோரமுக்கு பரவிய மணிப்பூர் வன்முறை: மிசோ இன குழு அறிக்கையால் வெளியேறும் மெய்தி மக்கள்

மிசோரமின் மிசோ இன குழு வெளியிட்ட அறிக்கையை அடுத்து, மெய்தி இன மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manipur violence: Meiteis leave Mizoram after ‘threat’ Tamil News

மிசோரமில் வசிக்கும் மிசோ இன குழுவும் மணிப்பூரின் குக்கி-ஜோமி குழுவும் நெருக்கமான இனப் பிணைப்பை கொண்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் குக்கி-ஜோமி பழங்குடி இன மக்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இரண்டு மாதத்துக்கு மேல் நீடித்து வரும் இந்த மோதல் சம்பவத்தால் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இரண்டு குக்கி-ஜோமி பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், மணிப்பூரின் அண்டை மாநிலமான மிசோரமுக்கும் கலவரம் பரவி வருகிறது. இது அங்குள்ள மெய்தி இன மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர்களில் பலர் நேற்று சனிக்கிழமை மாநிலத்தை விட்டு வெளியேறி தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலைக்கு பதிலளிக்கும் விதமாக, மணிப்பூர் அரசு, தனி விமானம் மூலம் அவர்களை மாநிலத்திலிருந்து வெளியேற்ற தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

மிசோரமில் வசிக்கும் மிசோ இன குழுவும் மணிப்பூரின் குக்கி-ஜோமி குழுவும் நெருக்கமான இனப் பிணைப்பை கொண்டுள்ளனர். அவர்களும் அண்டை மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். உண்மையில், மே 3 அன்று வன்முறை தொடங்கியதில் இருந்து மணிப்பூரைச் சேர்ந்த 12,584 குக்கி-சோமி மக்கள் மிசோரமில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதனிடையே, மிசோ தேசிய முன்னணி போராளிகளின் சங்கம் (MNF) மிசோரமில் வசிக்கும் மெய்தி இன மக்களை தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக" வெளியேறுமாறு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து தான் அங்கு தற்போதைய பீதி தொடங்கியது. மிசோ குழு வெளியிட்ட அறிக்கையில், மணிப்பூரில் சோ இன குழுவுக்கு எதிரான வன்முறையால் மிசோ மக்களின் உணர்வுகள் ஆழமாக புண்பட்டுள்ளதாகவும், இனி மெய்தி மக்கள் மணிப்பூரில் தொடர்ந்து வாழ்வது பாதுகாப்பானது அல்ல என்றும் கூறியுள்ளது.

மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 2,000 மெய்தி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பலர் அசாமின் பராக் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள். வெள்ளிக்கிழமை இரவு இந்த அறிக்கை வெளியான பிறகு, மிசோரமின் வடக்கு ரேஞ்ச் டி.ஐ.ஜி, "ஐஸ்வாலில் உள்ள மெய்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக" நான்கு இடங்களில் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்குமாறு உத்தரவிட்டார்.

சனிக்கிழமை பிற்பகலில், சில மெய்தி மக்கள் ஏற்கனவே மாநிலத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஐஸ்வாலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மெய்தி இனத்தை சேர்ந்த ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், நான்கு பேர் கொண்ட தனது குடும்பத்துடன் அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு தனது தனிப்பட்ட வாகனத்தில் சுமார் 7 மணி நேர பயணத்தில் செல்வேன் என்றார்.

மிசோரமில் இதுவரை தனக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும், மிசோக்கள் "மிகவும் மென்மையானவர்கள், மிகவும் அடக்கமானவர்கள்" என்றும் அவர் கூறினார். “ஆனால் இப்போது, ​​மெய்தி மக்கள் பலர் தங்கள் உடமைகளை வாடகை வீடுகளில் விட்டுவிட்டு ஓடுகிறார்கள். பராக் பள்ளத்தாக்கிலிருந்து பலர் சாலை வழியாக வெளியேறுகிறார்கள், மேலும் ஐஸ்வால் விமான நிலையத்தில் தங்குமிடம் தேடும் பலர் உள்ளனர். மக்கள் அச்சத்தில் உள்ளனர்,'' என்றார்.

இதற்கிடையில், மிசோரம் உள்துறை அமைச்சகம், மாநிலத்தில் வசிக்கும் மெய்தி மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று உறுதியளிக்க முயன்றது. சனிக்கிழமையன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய மிசோரம் உள்துறை ஆணையர் ஹெச் லாலெங்மாவியா, “நான் இன்று மிசோ தேசிய முன்னணி போராளிகளிடம் பேசினேன். அவர்கள் தங்கள் செய்தி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக சொன்னார்கள். இது ஒரு அச்சுறுத்தல் அல்ல, ஆனால் மெய்தி மக்களின் பாதுகாப்பிற்கான அக்கறையின் வெளிப்பாடு, நல்லெண்ணத்துடன் வெளியிடப்பட்டது என்று அவர்கள் கூறினர். அதன் விளைவு காரணமாக, அவர்கள் தங்கள் அறிக்கையைத் திரும்பப் பெறுவதாக நாங்கள் தீர்மானித்தோம்.

உள்துறை ஆணையர் அனைத்து மிசோரம் மணிப்பூரி சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததாக உள்துறை அமைச்சகம் மாலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. மேலும் அவர் அவர்களிடம், "வதந்திகளால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம், மேலும் பத்திரிகை அறிக்கையின் துரதிர்ஷ்டவசமான தவறான விளக்கத்தால் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று தங்கள் சக மெய்டீஸ் - அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இருவருக்கும் தெரிவிக்கும்படி அவர்களை வற்புறுத்தினார்".

மணிப்பூர் அரசின் செய்தித் தொடர்பாளர் சபம் ரஞ்சன் சிங் கூறுகையில், அனைத்து மிசோரம் மணிப்பூர் சங்கத்துடன் அரசு தொடர்பில் உள்ளது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது. மேலும் சிலர் மாநிலத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மிசோரம் உள்துறை இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, இது பதட்டத்தை குறைக்கும். நாங்கள் சங்கத்துடன் தொடர்பில் உள்ளோம், தேவைப்பட்டால், மக்கள் வெளியேறுவதற்கு நாங்கள் வாடகை விமானத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளோம், ”என்று அவர் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Manipur Mizoram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment