Advertisment

கருப்பு அரிசி, களிமண் பொம்மைகள், கடலை மிட்டாய், குங்குமப்பூ - ஜி.ஐ. பட்டியலில் இடம் பெற்றவைகள் இவை தான்!

மணிப்பூரின் ஈரப்பதமான விளைநிலங்களில் மாற்று நடவு அல்லது நேரடி நடவு மூலமாக கருப்பு அரிசி விவசாயம் செய்யப்படுகிறது.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manipur's Chak-Hao, Kovilpatti kadalai mittai ,Gorakhpur terracotta, Kashmir Saffron got Geographical Indication tag

Manipur's Chak-Hao, Kovilpatti kadalai mittai ,Gorakhpur terracotta, Kashmir Saffron got Geographical Indication tag

ஒரு ஊர் அல்லது நகரத்தில் தயாரிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட, புகழ்பெற்ற, பொருளுக்கு வழங்கப்படுவது தான் இந்திய புவிசார் குறியீடு. இந்த புவிசார் குறியீடு வழங்குவதன் மூலம் உள்நாட்டில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான மதிப்பும், அந்த பொருட்களை உருவாக்குபவர்களுக்கு வர்த்த ரீதியிலான லாபமும் கிடைக்க வழி வகை செய்வது இந்த ஜியோகிராஃபிகல் இண்டிகேசன் ஆகும். இந்த பொருளை வேறொரு இடத்தில் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாரம்பரிய உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை இந்த ஜி.ஐ. காப்பாற்றுகிறது. உதாராணத்திற்கு தஞ்சாவூரில் செய்யப்படும் தலையாட்டி பொம்மையை, கோவையில் செய்து, அதனை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்று விற்பனை செய்தால் அது சட்டப்படி குற்றமாகும்.

Advertisment

பண்ருட்டி பலாப்பழம், சேலம் மாம்பழம், மதுரை சுங்குடிச் சேலை, தூத்துக்குடி உப்பு, நெல்லை அல்வா, பத்தமடை பாய், ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, காரைக்குடி கண்டாங்கி சேலை, தஞ்சை வீணை, ஓவியங்கள், தலையாட்டி பொம்மை, கலைத்தட்டு, காஞ்சி பட்டு, திண்டுக்கல் பூட்டு, ஆம்பூர் பிரியாணி, திருப்பூர் பனியன், நாகர்கோவில் நேந்திரம், தேனி கரும்பு, ஊத்துக்குளி வெண்ணெய் போன்றவைகளுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி கடலை மிட்டாய்

அந்த வகையில் தற்போது தமிழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பை சேர்த்துள்ளது, தூத்துக்குடி கோவில்பட்டியில் உருவாகும் கடலைமிட்டாய். அதற்கு தற்போது ஜி.ஐ. வழங்கி அறிவித்துள்ளது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Cell for IPR Promotion and Management (CIPAM) ட்விட்டர் பக்கம். கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க கடந்த 7 வருடங்கள் பெரும் போராட்டத்தையே நடத்தியுள்ளனர் கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர். இவர்களுக்கு உறுதுணையாய் நின்று இந்த அங்கீகாரம் கிடைக்க உதவியவர் அப்போதைய கோவில்பட்டி சப் கலெக்டர் மற்றும் இன்றைய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன்.

கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்திருக்கும் 5000 குடும்பத்தினர் இந்த தொழிலில் ஈட்பட்டு வருகின்றனர். 1920ம் ஆண்டில், பொன்னம்பல நாடார் என்பவர் தான் முதன் முதலாக இந்த கடலைமிட்டாயை தயாரிக்க துவங்கினார். 100 ஆண்டுகள் கழித்தும், தமிழர்களின் அன்றாட வாழ்வில் நிலைத்து நிற்கும் கடலை மிட்டாயின் சுவைக்கான காரணம் அதில் பயன்படுத்தப்படும் மண்டவெல்லம் தான் என்கிறார்கள் அவ்வூர்வாசிகள்.

Gorakhpur terracotta

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு மட்டுமில்லாமல் உத்திர பிரதேசத்தில் இருக்கும் கோரக்பூர் களிமண் பொம்மைகளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஔரங்காபாத், பர்வலியா, லாங்கடி, குலாரியா, புதாதிஹ், அமவா, ஏக்லா, பத்ரி பஜார், பெல்வா ராய்ப்பூர் போன்ற இடங்களில் வசிக்கும் உள்ளூர் குயவர்களால் இங்கு உலக புகழ்பெற்ற களிமண் பொம்மைகள் செய்யப்படுகிறது. யானை, விளக்குகள், மான், குதிரை, ஒட்டகம் போன்றவை இங்கு செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகிறது. இவை அனைத்தும் கைகளால் உருவாக்கப்பட்டு இயற்கை வர்ணங்களால் அலங்காரம் செய்யபடுகிறது.

Chak Hao

அதே போன்று மணிப்பூரில் விளையும் கருப்பு நிற அரிசிக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சக் ஹாவ் (Chak Hao) என்ன்று அழைக்கப்படும் இந்த இந்த அரிசிக்கான புவிசார் குறியீட்டிற்கு விண்ணப்பித்திருந்தது கன்சோர்ட்டியம் ஆஃப் ப்ரோடிசர்ஸ் ஆஃப் சக் ஹாவ் (Consortium of Producers of Chak-Hao). மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயம் செய்யப்படும் இந்த வகை அரிசி மிகவும் வாசனை மிக்கது. சாதம் மற்றும் பாயாசம் இந்த அரிசியை கொண்டு பாரம்பரிய முறைப்படி மணிப்பூர் மக்கள் சமைக்கின்றனர்.  இதில் ஃபைப்ரஸ் ப்ரான் லேயர் மற்றும் க்ரூட் ஃபைபர் கண்டெண்ட் அதிகம் இருப்பதால் இதனை சமைக்க 40 - 45 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும். மணிப்பூரின் ஈரப்பதமான விளைநிலங்களில் மாற்று நடவு அல்லது நேரடி நடவு மூலமாக விவசாயம் செய்யப்படுகிறது.

Kashmir Saffron

காஷ்மீரின் கரேவாஸில் (உயர் நிலத்தில்)  விவசாயம் செய்யப்படும் குங்குமப்பூவிற்கும் இம்முறை ஜி.ஐ. வழங்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1600 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் இருக்கும் நிலத்தில் விளையக் கூடியது இந்த காஷ்மீர் குங்குமப்பூ. சரும பிரச்சனைகளுக்கு, மருத்துவத்திற்கு மற்றும் சமையலில் பயன்படுத்தப்படும் குங்குமப் பூ அதன் அடர்த்தியான நிறம், மணம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. இதன் நிறத்திற்கு, இந்த பூவில் இருக்கும் அதிகப்படியான க்ரோசின் நிறமிகள் தான் காரணம். ரசாயனம் ஏதும் பயன்படுத்துமல் இயற்கையான முறையில் இந்த குங்குமப் பூ பதப்படுத்தப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Geographical Indication Tag
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment