மும்பையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மராத்தா இன மக்கள் புதன் கிழமை பெரும் பேரணி நடத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது.
மஹராஷ்டிரா மாநிலம் மும்பையில், மராத்தா இன மக்கள், தங்கள் இனத்தவருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், கோப்ரடியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும், எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் சட்ட திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக, கடந்த ஒரு வருடத்தில் மராத்தா இன மக்கள் 57 பேரணிகளை போராட்ட வடிவில் மேற்கொண்டனர். இதன், முதல் பேரணி ஔரங்காபாத்தில் நடைபெற்றது. இந்நிலையில், புதன்கிழமை இதே கோரிக்கைகளை வலியுறுத்தி புதன் கிழமை காலை 11 மணியளவில் ஜிஜமாத்தா உதயான் பகுதியில் துவங்கியது. இந்த மாபெரும் பேரணி ஆசாத் மைதானத்தில் நிறைவடையும். இதில், மராத்தா இனத்தை சேர்ந்த திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
இந்த பேரணி குறித்து இதனை ஏற்பாடு செய்த மராத்தா சகல் சமாஜ் அமைப்பை சேர்ந்த சஞ்ஜீவ் போர் படீல் கூறியதாவது, “கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மராத்தா இன மக்கள் பெருமளவில் திரண்டு வருவது இதுவே முதன்முறை. 57 முறை இம்மாதிரியான பேரணிகளை நடத்தியிருந்தாலும் எங்கள் கோரிக்கைகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லி.”, என கூறினார்.
பேரணியின் சிறப்பம்சங்கள்:
1. இந்த பேரணிக்காக ஜேஜே மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
2. தெற்கு மும்பையில் உள்ள பள்ளிகள் முன்னேற்பாடாக மூடப்பட்டன.
3. விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க விவசாய கடங்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு தகுந்த ஆதார விலையை அறிவிக்க வேண்டும் என்பன போராட்டக்காரர்களின் பிற கோரிக்கைகள்.
4. சகல் மராத்தா சமாஜ், எனப்படும் மராத்தா இன குழுக்கள் பல அடங்கிய அமைப்பானது இந்த பேரணியை நடத்துகிறது.