இந்தப் படம் 'பாகுபலி-2' வசூலை எளிதில் மிஞ்சும்... சொல்கிறார் மார்கண்டேய கட்ஜூ

இப்படி ஒரு படத்தை திரையிட்டால் பாகுபலி திரைப்படத்தை விட 10 மடங்கு வருமானம் கிடைக்கும்.

கடந்த சில வருடங்களாக நிகழும் பல்வேறு சம்பவங்களை பார்க்கும் போது, பசுமாடுகளை வைத்தே அரசியல் நடத்தப்படுவதாக தெரிகிறது. குறிப்பாக மத்திய அரசின் இது போன்ற செயல்பாடுகள் குறித்து பல்வேறு விவாதங்களும் நிகழ்ந்தவாரே உள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், பாலிவுட் இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கினால் அவர்கள் பாகுபலி படத்தைக் காட்டிலும் அதிக வெற்றியை பெற முடியும். “தி பிளானட் ஆப் தி ஏப்” என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டரை அந்த பதிவுடன் இணைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “தி பிளானட் ஆப் தி ஏப்” என்று ஹாலிவுட்டில் ஒரு திரைப்படம் இருக்கிறது. அப்படத்தில் வரும் மனித குரங்குகள் மனிதனை அடிமை போல தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். தற்போது நான் பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பரிந்துரை செய்கிறேன். அதாவது, அந்த திரைப்படத்தில் வரும் மனிதக்குரங்கு போல, நீங்கள்  ஒரு படத்தில் பசுமாட்டை பயன்படுத்தி புதிய திரைப்படம் எடுக்கலாம். அப்படி ஒரு படத்தை எடுத்தால் பாகுபலியைவிட 10 மடங்கு லாபம் உங்களுக்கு கிடைக்கும். ஹரி ஓம். என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்கண்டேய கட்ஜூவின் பதிவினை பார்த்த நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அதோடு மட்டுமல்லாமல் கட்சுவின் பதிவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் “தி ரைஸ் ஆப் பிளானெட் ஆப் தி கவ்” என்ற பெயரில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அமர்களப்படுத்தி விட்டனர். அதனை மார்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் பசுமாடுகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்ய அரசு திட்டமிட்டதால், மார்கண்டேய கட்ஜூ இந்த கருத்தை பதிவு செய்திருப்பது என்பது விளங்குகிறது. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில், உத்திரபிரதேச மாநில அரசு செய்வது பைத்தியக்காரத்தனமானது. மாநிலத்தில் உள்ள ஏராளமான மனிதர்களுக்கு தகுந்த சுகாதாரவசதி கிடைப்பதே கடினமாக இருக்கும் வேளையில், காயமடைந்த பசுமாடுகளை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுகிறது. இதன்தொடர்ச்சியாக, அவர்கள் அடுத்து 3 படுக்கையறை வசதி கொண்ட மனை, மகப்பேறு விடுமுறை, பயணம் செய்வதற்கு சிறப்பு ஏ.சி பேருந்துகள் என பேல்வேறு வசதிகளை அவைகளுக்கு செய்து கொடுப்பார்கள் என நினைக்கிறேன் என்று அப்பதிவில் மார்கண்டேய கட்ஜூ கேலி, கிண்டலுடன் விமர்சித்துள்ளார்.

×Close
×Close