சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவுக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள பிணைப்பு சற்று அதிகமானது. ஜெயலலிதா இறந்தது, ஜல்லிக்கட்டிற்காக மாணவர்களின் எழுச்சி, தமிழகத்தில் நடக்கும் அரசியல் நகர்வுகள் என தமிழக நிகழ்வுகள் குறித்த எல்லா விஷயங்களுக்கும் அவரிடம் இருந்து கருத்துகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிடும் எழுத்துக்கள் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படும்.
இந்நிலையில், 'தி ஹிந்து' நாளிதழில் வெளிவந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த செய்தியை முன்னிறுத்தி, கட்ஜூ தனது ஃபேஸ்புக்கில் சில காட்டமான கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில், "1967-68-ல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்த போது, எனது சில தமிழ் நண்பர்களுடன், சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ஒரு படத்தை பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது படம் ஆரம்பித்தபோது, சிவாஜி கணேசன் திரையில் தோன்றிய போது, ரசிகர்கள் அவருக்கு கொடுத்த அந்த பிரம்மாண்டமான வரவேற்பு இன்னும் என் நினைவில் உள்ளது.
இப்போது, அதேபோன்று தென்னிந்திய ரசிகர்கள் ரஜினிகாந்தின் மீது பைத்தியமாக உள்ளார்கள். சிலர் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகின்றனர்.
ஆனால், ரஜினிகாந்திடம் என்ன ஐடியாக்கள் இருக்கிறது? மிகப்பெரிய பிரச்சனைகளான வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்துக் குறைவு, சுகாதார பற்றாக்குறை, விவசாயிகளின் துயரங்கள் போன்றவற்றிற்கு ரஜினியிடம் ஏதும் விடை இருக்கிறதா? அவரிடம் ஒரு விஷயமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்புறம் ஏன் மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள்? அமிதாப்பச்சனை போல, ரஜினிகாந்திற்கு தலையில் ஒன்றும் கிடையாது" என கடுமையாக விமர்சித்துள்ளார்.