விமானப்படை மார்ஷல் அர்ஜன் சிங்கின் உடல் நாளை அடக்கம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்தபோது, அவரது உடலுக்கு சக்கர நாற்காலியில் வந்து அஞ்சலி செலுத்திய உன்னத வீரர் அர்ஜன் சிங்.

உடல் நலக் குறைவு காரணமாக காலமான இந்திய விமானப் படையின் மார்ஷல் அர்ஜன் சிங்கின் (98) உடல் தலைநகர் டெல்லியில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

இந்திய விமானப்படையின் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அர்ஜன் சிங். இவர், கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி, தற்போது பாகிஸ்தானில் உள்ள லியால்பூரில் பிறந்தார். தனது 19-வது வயதில் இந்திய விமானப்படையில் சேர்ந்த இவர், 1939-ஆம் ஆண்டில் பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரிலும் போரிட்டார்.

கடந்த 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில், அர்ஜன்சிங் தலைமையிலான விமானப்படை துணிச்சலுடனும், வீரத்துடனும் எதிரிகளை வீழ்த்தி, இந்திய வெற்றிக்‍கு முக்கிய பங்கு வகித்தது.

விமானப்படை தளபதியாக கடந்த 1964-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு, தொடர்ந்து 5 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். 1970-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அர்ஜன் சிங்குக்கு இந்தியாவின் இரண்டாவது உயேறிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. ஓய்வுக்கு பின்னர், பல்வேறு நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றிய அவருக்கு, கடந்த 2002-ஆம் ஆண்டில், ராணுவத்தின் ஃபீல்டு மார்ஷல் பதவிக்கு இணையான, ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட விமானப் படையின் மார்ஷலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற விமானப் படையின் ஒரே மார்ஷல் அர்ஜன் சிங் என்பது குறிப்பிடத்தக்‍கது.

கடந்த 2015-ஆம் ஆண்டு, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் அவரது உடலுக்கு சக்கர நாற்காலியில் வந்து அஞ்சலி செலுத்திய உன்னத வீரர் அர்ஜன் சிங்.

இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று காலை டெல்லி ராணுவ மருத்துவமனையில் அர்ஜன் சிங் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்கு விரைந்து சென்று மார்ஷல் அர்ஜன் சிங் உடல் நலம் குறித்து விசாரித்தார். த்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகளும் மருத்துவமனைக்கு சென்று அர்ஜன் சிங் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

இதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார். அர்ஜன் சிங்கின் மறைவுக்‍கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களை இரங்கலை தெரிவித்துள்ளனர்.

“இந்திய விமானப்படை அர்ஜன் சிங்கின் வழிகாட்டுதல்களை என்றும் நினைவில் வைக்கும். அர்ஜன் சிங் அர்ப்பணிப்புகளை நாடு எப்போதும் மறவாது. விமானப்படையின் கட்டமைப்புக்கு மிகவும் பாடுபட்டவர் மார்ஷல் அர்ஜன் சிங்” என தனது இரங்கல் செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த அர்ஜன் சிங்கின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இவரது உடலுக்கு நாளை இறுதி சடங்கு செய்யப்பட்டு, டெல்லியில் உள்ள ப்ரார் சதுக்கத்தில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close