நாடாளுமன்றத்தில் தலித் சமூகத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து பேச அனுமதிக்காவிட்டால், உடனடியாக ராஜினாமா செய்து விடுவேன் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதன் முதன் நாளான நேற்று மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் அலுவல்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூடியது. பகுஜன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், முன்னாள் உத்திரபிரதேச மாநில முதலமைச்சருமான மாயாவதி, மாநிலங்களைவில் உத்திரபிரதேச மாநிலம், ஷரன்பூரில் நிகழ்ந்த தலித் மக்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, தொடர்ந்து பேச மாயாவதிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், ஆத்திரம் அடைந்த மாயாவதி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான ஆட்சியில் தலித் மக்கள் மீது வன்முறைகள் அதிகரித்துள்ளது என்பது குறித்து பேச அனுமதிக்காவிட்டால், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது” எனக்கு பேசுவதற்கு அனுமதி அளிக்காவிட்டால், தற்போதே எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்” என்று கூறினார்.
மாநிலங்களவைவின் வெளியே வந்து மாயாவதி கூறும்போது: “சமூதாயத்தில் நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து மாநிலங்கவையில் பேச முயற்சிக்கும் போது, எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? நலிவடைந்த மக்கள் குறித்து மாநிலங்களவையில் பேச முடியாவிட்டால், எனக்கு அவையில் இருப்பதற்கு எந்த தகுதியும் இல்லை. எனவே தான் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று கூறினேன்” என்று தெரிவித்தார்.
மாயாவதி இவ்வாறு கூறிவிட்டு வெளிநடப்பு செய்தததையடுத்து, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்வி கூறும்போது: மாயாவதி அவையை அவமதித்துள்ளதோடு, சாவாலும் விடுத்துள்ளார். எனவே, மாயாவதி கண்டிப்பாக இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது: “மாயாவதி தெரிவித்துள்ள கருத்தானது சரியானது என்பதோடு மிக முக்கியத்துவம் வாய்தது. பாஜக தலைமையிலான மத்திய அரசு தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் அட்டூழியங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள் அபாய நிலையில்தான் வாழ்ந்து வருகின்றனர்” என்று கூறினார்.