சேலத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக ரோகிணி சமீபத்தில் பதவியேற்றார். 171 மாவட்ட ஆட்சியர்களைக் கண்ட சேலம் மாவட்டத்தின், முதல் பெண் மாவட்ட ஆட்சியர் இவர்தான். சேலத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியரை தெரிந்த உங்களுக்கு, இந்தியாவின் இளம் பஞ்சாயத்து தலைவரும் பெண் என்பது தெரியுமா?
ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள தர்ஜூன் எனும் பஞ்சாயத்தின் தலைவர் ஜப்னா சௌஹான் தான், இந்தியாவின் இளம் பஞ்சாயத்து தலைவர். அவருக்கு வயது 22.
ஏழை குடும்பத்தை சேர்ந்த ஜப்னா சௌஹான் தன் கிராமத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின்பு, ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளர் மற்றும் நிரூபராக பணிபுரிந்தார்.
ஆனால், தன்னுடைய கிராமத்திற்கு ஏதேனும் நல்லதை செய்ய வேண்டும் என அவர் எண்ணிக்கொண்டே இருப்பார். அதை செய்வதற்கான முதல் படி, தன் ஊராட்சியை மேம்படுத்த தான் பஞ்சாயத்து தலைவராக வேண்டும் என நினைத்தார். பஞ்சாயத்து தலைவரானார்.
பதவியேற்ற முதல் வருடத்திலேயே தன் கிராமத்தில் பல அதிரடி மாற்றங்களை புகுத்தினார். தன் கிராமத்தில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தினார். அதற்கு, பல எதிர்ப்புகள் கிளம்பினாலும், அதுகுறித்து கவலைப்படாமல் முன்னேறிக் கொண்டே இருந்தார் ஜப்னா.
தன் கிராமத்தில் மது விலக்குக்காக மாற்றங்களை புகுத்தியதற்காக, மது ஒழிப்பு குறித்து குஜராத்தில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் அவர் கலந்துகொண்டார். மேலும், அம்மாநிலத்தில் மது ஒழிப்புக்கான நட்சத்திர தூதுவராக ஜப்னாவை நியமிக்கசமாஜிக் ஜாகரன் மஞ்ச் என்ற அமைப்பு அரசுக்கு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் வீரபத்ர சிங்குடன் ஜப்னா சஹான்.