பைலட்டாக பணிபுரிவதைவிட த்ரில்லிங்கான வேலை வேறெதுவும் இல்லை. வானம்தான் எல்லை. புதிய புதிய மனிதர்கள், நாடுகள், அனுபவங்கள், விமான விபத்துகளிலிருந்து தப்பித்த அனுபவங்கள், ஹாட்பீட் எகிரும் நிகழ்வுகள் என பல்வேறு புதுமைகளை அந்த வேலையின் மூலம் நாம் அடைய முடியும்.
அந்த வேலையில் வீட்டிற்கு ஒருவர் இருந்தாலே, அவர்களிடமிருந்து கேட்பதற்கு நிஜக் கதைகள் இருக்கும். ஆனால், ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருமே ‘பைலட்டுகளாக’ இருந்தால்? அடபோங்க! ஒரு வீட்டில் உள்ள அனைவருமே பைலட்டுகளாக இருப்பார்களா? என கேட்கிறீர்களா? உண்மைதான்.
இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பம் தான் இந்த பெருமையை பெற்றிருக்கிறது. அக்குடும்பத்தை சேர்ந்த ஜெய் தேவ் பேசின் என்பவர் கடந்த 1954-ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றினார். நாட்டிலேயே அப்போது கமாண்டராக பணியாற்றிய ஏழு பேரில் இவரும் ஒருவர். இவருடைய மகன் ரோஹித் தன் தந்தையை பின்பற்றி பைலட்டானார்.
இதன்பின், ரோஹித் நிவேதிதா என்பவரை மணந்தார். 26 வயதில், உலகிலேயே மிகவும் இளம்வயதில் ஜெட் பைலட்டாக பணியாற்றிய முதல் பெண் நிவேதிதா தான்.
”பறத்தல் என்னைக் கவர்ந்தது. ஆறு வயதிலிருந்தே பறக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒருமுறை நான் என் தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்தபோது என்னுடைய தந்தை நான் இந்தியன் ஏர்லைன்ஸில் பைலட்டாக பணியாற்ற கிடைத்த கடிதத்தை என்னிடம் வந்து கொடுத்தார். அந்த நாள் என்னுடைய நினைவை விட்டு அகலவில்லை. அந்நாள் 1984-ஆம் ஆண்டு, ஜூன் 29-ஆம் தேதி”, என கூறுகிறார் நிவேதிதா.
நிவேதிதா 20 வயதில் பைலட் ஆனார். 33-வது வயதில் ஏர்பஸ்-300 என்ற உலகிலேயே மிகப்பெரும் விமானத்தின் கமாண்டர் ஆனார். நிவேதிதா தனக்கு குழந்தைகள் பிறந்த பிறகும் தன் கனவுப் பணியை தொடர்கிறார்.
ரோஹித் – நிவேதிதா தம்பதியரின் மகன் ரோஹன் போயிங் 777 விமானத்தின் கமாண்டராக பணிபுரிகிறார்.
“என்னுடைய அம்மா தன்னுடைய பணிக்கு எப்படி தயாராகிறார் என்பதை நான் குழந்தையாக இருந்ததிலிருந்தே ரசித்திருக்கிறேன். அப்போதிருந்தே என்றைக்காவது ஒருநால் அதேபோல் உடை அணிந்துக்கொள்ள வேண்டும் என நினைத்துக் கொள்வேன்”, எனக்கூறும் அவர்களின் 26 வயதான மகள் நிஹாரிகா, இண்டிகோ நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 விமானத்தின் கமாண்டராக பணிபுரிகிறார்.
ரோஹித் தன் மனைவி நிவேதிதாவுடன் ஒருமுறை கூட தொழில்ரீதியாக விமானத்தில் பயணம் மேற்கொண்டதில்லை. ஆனால், ரோஹித் தன் மகன் ரோஹனுடன் சுமார் 10 பயணங்களுக்கும் மேல் ஒன்றாக பயணித்திருக்கிறார்.
தன் பிள்ளைகள் பைக், காரில் பயணித்தால் எப்படி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என பெற்றோர்கள் அறிவுறுத்துவார்களோ, அதேபோல் தான் ரோஹித் – நிவேதிதா தம்பதியரும்.
”எப்போதுமே நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துவோம். பருவநிலை மோசமாக இருக்கும்போது விமானத்தை தரையிறக்கக் கூடாது என சொல்லுவோம். அவசரப்படக்கூடாது என அவர்களை அறிவுறுத்துவோம்.”, என கூறுகிறார் ரோஹித்.