குடிநீர் பஞ்சம் தமிழகம் முழுதும் தலை விரித்தாடுகிறது. பெண்கள், குழந்தைகள் தெரு முனைகளில், குடிநீரை முறையாக வழங்கக்கோரி தினமும் போராடுகின்றனர். சென்னையின் குடிநீர் ஆதாரங்களும் வற்றி, கல்குவாரி தண்ணீரை உபயோகிக்கும் அளவுக்கு குடிநீர் பிரச்சனை கோர முகத்தைக் காட்டியுள்ளது. நாம் எல்லோரும் அரசாங்கத்தையும், அதன் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டே இருக்கிறோம். தண்ணீர் தாருங்கள் என கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆமாம், நீர் மேலாண்மையை அரசாங்கம் தான் சரிவர மேற்கொண்டு நம்மை இந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்றியிருக்க வேண்டும். ஆனால், அரசாங்கத்தைக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கும் நேரத்தில் நாம் தண்ணீரை தேடும் முயற்சியில் இறங்க வேண்டும்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வறட்சிதான். இந்தாண்டும் கடுமையான வறட்சி. அம்மாநிலத்தில் இந்தாண்டு பெய்த மழை, கடந்த 10 ஆண்டுகளில் பெய்த மழையின் சராசரியை விட 10 சதவீதம் குறைவு.
அம்மாநிலத்தில், கடந்த பல வருடங்களாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் கிராமம் தான் கொரியா மாவட்டத்திலுள்ள சாஜா பஹத். மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. அத்துடன் கடும் குடிநீர் பஞ்சம். கிராம மக்களுக்கு குடிநீர் பிரச்சனையிலிருந்து தப்பிக்க என்ன செய்வதென்றே தெரியவில்லை. கால்நடைகள் தண்ணீர் இன்றி செத்து மடிந்தன. அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளை கேட்கவில்லை. 27 வருடங்களாக தண்ணீர் பிரச்சனையில் சிக்கி அவர்கள் உளன்றனர்.
27 வருடங்களுக்கு முன் தன் கிராம மக்களின் பிரச்சனைகளை தீர்க்க தனி மனிதனாக களம் இறங்கினான் 15 வயது சிறுவன் ஷ்யாம் லால். யாரும் அவனுக்கு துணை நிற்கவில்லை. அவனிடம் மண்வெட்டி மட்டுமே இருந்தது. அந்த கிராமத்தின் அருகே உள்ள காட்டில் நன்றாக தண்ணீர் பெருக்கெடுக்கும் இடத்தை தேர்ந்தெடுத்தான் சிறுவன் ஷ்யாம் லால். மண்வெட்டியின் உதவியுடன் குளத்தை வெட்ட துவங்கினான்.
சொல்வதற்கு வேண்டுமானால் எளிமையாக இருக்கலாம். ஷ்யாம் லாலுக்கு கிராமத்தினர் உதவிக்கு வரவில்லை என்பதோடு, அவனை எள்ளி நகையாடினர். ஒரு சிறு பையன் மண்வெட்டியுடன் குளம் வெட்டப் போகிறேன் என்று கிளம்பினால் நமக்கும் சிரிப்புதானே வரும். அந்த கிராமத்தினருக்கும் அப்படித்தான் இருந்தது.
ஆனால், அவற்றையெல்லாம் நினைத்து ஷ்யாம் லால் பின்வாங்கவில்லை. 27 வருடங்களாக குளம் வெட்டினார் ஷ்யாம் லால். இப்போது அவருக்கு வயது 42. தன் இளமை முழுவதையும் தன் கிராமத்திற்காகவும், கால்நடைகளுக்காகவும் அர்ப்பணித்தார். அன்று ஷ்யாம் லாலின் செய்கையை கிண்டல் செய்தவர்கள் எல்லோரும், அவரது கடும் உழைப்பினால் உருவான குளத்து நீரால் தாகம் தீர்த்துக் கொள்கின்றனர்.
இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்கு ஷ்யாம் லால் அளித்த பேட்டியில், ”யாரும் எனக்கு உதவிபுரியவில்லை. அரசாங்கம், கிராம மக்கள் யாரும் உடனில்லை. ஆனால், என் கிராம மக்களுக்காகவும், கால்நடைகளுக்காகவும் நான் இந்த பணியை செய்து முடித்தேன்.”, என கூறினார்.
இம்மாதிரியான தனி மனிதர்களால் கிராமங்கள் உயிர் பெறும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.