ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி விசைப்படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற தாங்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், சென்னையில் கடந்த 18-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்தவில்லை. மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக பயன்படுத்தப்பட்ட ரப்பர் தோட்டாக்கள் இந்திய கடற்படை பயன்படுத்தும் வகை அல்ல. மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தீவிரமாக விசாரித்த பிறகே, உண்மை விவரம் தெரியவரும்" என்றார்.
இந்தச் சூழ்நிலையில், "கைப்பற்றப்பட்ட தோட்டா துண்டுகள் இந்திய கடலோர காவல்படையினர் பயன்படுத்தும் தோட்டாக்கள் தான். 0.22MM குண்டு கடலோர காவல்படையினரால் பயன்படுத்தப்படுகிறது. கடல்படை வீரர்கள், படகை நிறுத்துமாறு எச்சரித்தும் நிறுத்தாமல் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம். இது தொடர்பாக சென்னையில் விசாரணை நடைபெற்று வருகிறது" என இந்திய கடலோர காவல்படை கமாண்டோ ராமாராவ் தங்கச்சிமடத்தில் கூறியதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
மேலும், 'அது ரப்பர் குண்டு என நினைத்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என தனது கருத்தை தெரிவித்து இருக்கலாம்" என ராமாராவ் கூறியதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், ராமாராவ் அப்படி எந்த தகவலையும் கூறவில்லை என்றும், சில ஊடகங்கள் இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன என்றும் இந்திய கடலோர காவல்படை மீண்டும் மறுப்பு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், " மீன்பிடி படகு சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டின் சில ஊடகங்கள் தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகிறது.
கடலோர காவல்படை கமாண்டர் இவ்வாறு கூறியதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், 'இந்த விவகாரம் குறித்து என்னால் எந்த உறுதியான தகவலையும் கூற முடியாது' என்று தான் கமாண்டர் கூறினார். கிடைக்கப்பெற்ற தோட்டாக்கள் இந்திய கடலோர காவல்படை பயன்படுத்துபவை தான் என அவர் கூறவேயில்லை.
கடந்த 14-ஆம் தேதியே, நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டோம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை' என்று கூறியும், அவரது அறிக்கைக்கு தவறு கற்பிக்கும் விதமாக வெளியாகியுள்ள இச்செய்தி கண்டனத்திற்குரியது. செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.