பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் முதற்கட்டமாக, மோடி நேற்று மாலை ஜெர்மனி தலைநகர் சென்றடைந்தார். நேற்றிரவு ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி - ஏஞ்சலா மெர்க்கல் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு இன்று நடைபெற்றது. இதனிடையே இந்தியா- ஜெர்மனி இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அப்போது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு, திறன் மேம்பாடு, நகர்புற கட்டமைப்பு, ரயில்வே மற்றும் சிவில் விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் எதிர்கால திட்டங்களை வரையறுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டன.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியா-ஜெர்மனி இடையேயான இந்த சந்திப்பு இரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்பதோடு, உலகநாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. திறன் மேம்பாட்டில் ஜெர்மனி உலகளவில் சிறந்து விளங்குகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள இளைஞர்களும் பயன் பெற முடியும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்றவற்றில் இந்தியா -ஜெர்மனி இடையேயான ஒத்துழைப்பானது, வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் அமையும். மேலும், இணைய பாதுகாப்பிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
விளையாட்டுத் துறையில் குறிப்பாக கால்பந்து போன்றவற்றில் முன்னேற்றம் காண ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். சிவில் விமான போக்குவரத்தில் இந்தியா வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே இந்தியா ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது என்று கூறினார்.
முன்னதாக பேசிய ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சரோ மெர்க்கல் கூறும்போது: இந்த சந்திப்பின் மூலம் இருநாடுகளிடையே உறவு அதிகரித்துள்ளது. சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. பருவநிலை மாற்றம் அனைவருக்கும் முக்கிய பிரச்சனையாக விளங்குகிறது. இந்தியா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து ஜி20 மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று கூறினார்.