உத்திர பிரதேச மாநிலம் மீரட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரம்மாண்ட கோவில் நிறுவப்படவுள்ள நிலையில், மற்ற அரசியல் தலைவர்களுக்கும் கோவில் நிறுவப்பட்டுள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ளலாமே. உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 100 அடி பிரம்மாண்ட சிலையுடன் கூடிய கோவில் கட்ட ஒருவர் முடிவு செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான ஜே.பி சிங் என்பவர் தான் இந்த கோவிலை கட்டுகிறார். உத்திரபிரதேச மாநில பொதுப்பணியித்துறை நீர்பாசன கோட்டத்தில் பொறியாளராக பணியாற்றி ஜே.பி சிங், கடந்த 29-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது கவனிக்கத்தக்கது.
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சர்தனா பகுதியில் தான் இந்த கோவில் கட்டப்படவுள்ளது. அங்கு, 100 அடி உயரத்தில் நரேந்திர மோடியின் பிரம்மாண்ட சிலையும் நிறுவபப்படவுள்ளது. இது குறித்து ஜே.பி சிங் கூறும்போது: இந்தியாவின் மீது நரேந்திர மோடி வைத்துள்ள பற்றே நான் இவ்வாறு செயல்படுவதற்கு காரணம். மேடியின் வளர்ச்சி திட்டங்களை நினைவு கூறும் வகையில் இந்த கோவிலை கட்ட முடிவு செய்தேன். இதற்காக மீரட்-கர்னல் நெடுஞ்சாலையில் 5 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறேன். நரேந்திர மோடியின் கோவிலை கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஆகும். அக்டோபர் 23-ம் தேதி கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெறவுள்ளது என்று கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/PM-Narendra-Modi-750.jpg)
5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த கோவிலுக்கு ரூ.10 கோடி வரை செலவு ஆகும் என்றும், இதற்காக மக்களிடம் இருந்து நன்கொடை பெற திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் ஜே.பி சிங்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் நிலையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டுவது என்பது அவசியம் தானா என்ற கேள்வியும் எழத் தான் செய்கிறது. நல்லவேளையாக அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுக்காதவரை சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்.
எனினும், முன்னதாகவே பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி, ராஜ்காட்டில் 2015-ம் ஆண்டு முதலே கோவில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்களால் நடத்தப்படும் ட்ரஸ்ட் ஒன்றின் மூலமாக இந்த கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த கோவிலில் ரெகுலராக பூஜையும் நடத்தப்படுகிறதாம்.
இந்தியாவில் சினிமா பிரபலங்கள் முதல், விளையாட்டு வீரர்கள் வரை சிலைவைத்து, கோவில் நிறுவப்படும் நிகழ்வுக்கு பஞ்சம் இருப்பதாக தெரியவில்லை. அந்தவகையில், 2 அரசியல் தலைவர்களின் கோவில்கள் இருப்பதை தெரிந்து கொள்வோம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
தெலங்கானா மாநிலத்தில் உள்ள மல்லியல் பகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோவில் நிறுவப்பட்டுள்ளது. அந்த கோவிலில் சோனியா காந்தியின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிவு நிகழ்ந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அக்கோவிலை நிறுவியுள்ளனர்.
எம்.ஜி.ஆர் கோவில்
திருவள்ளூர் மாவட்டம், நத்தமேடு கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர் கோவில்
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு, திருவள்ளூர் மாவட்டம், நத்தமேடு கிராமத்தில் கோவில் நிறுவப்பட்டுள்ளது. சினிமா மூலம் பிரபலமாகி பின்னர் அரசியல் வாழ்க்கையில் நுழைந்து முதலமைச்சர் அரியணைக்கு வந்த எம்.ஜி.ஆர், தமிழக மக்களின் மனதில் இன்றும் அழியா புகழ் பெற்றுள்ளார். அவரது நினைவாக கடந்த 2011-ம் ஆண்டு இந்த கோவில் உள்ளது.