ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு செப்.9-10 தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்கள் டெல்லி வர உள்ளனர். ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இன்று இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் இரவு 7.30 மணியளவில் விருந்து அளித்து உபசரிக்கிறார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபராக பைடனின் முதல் இந்தியா வருகை இதுவாகும். கடைசியாக 2020 பிப்ரவரியில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார்.
மோடி அமெரிக்கா சென்ற போது பைடன் மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்து அளித்து உபசரித்த நிலையில் இது ஒரு பரஸ்பர நிகழ்வாகும் என வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இன்று சந்திப்பின் போது இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். அணுசக்தி, பாதுகாப்பு, விசா, தூதரகங்கள், ரஷ்யா-உக்ரைன் போர், ஜி20 உள்ளிட்ட இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உச்சிமாநாட்டில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் ஒரு கூட்டு அறிக்கைக்கு அமெரிக்கா காட்டும் நெகிழ்வுத் தன்மையைப் பொறுத்தது. உக்ரைன் மோதலில் அமெரிக்கா தலைமையிலான G7 குழுவும், ரஷ்யா-சீனா கூட்டமைப்பும் முரண்பட்டுள்ளன.
ஜோ பைடன் இன்று மாலை டெல்லி வந்தடைவார். இரண்டு நாள் மாநாட்டை முடித்து விட்டு அவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வியட்நாம் செல்கிறார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் இன்று வெள்ளிக்கிழமை தனித்தனியாக இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“