/tamil-ie/media/media_files/uploads/2017/09/Farooq_collage.jpg)
5 வயதிலேயே போலியாவால் பாதிக்கப்பட்ட சக்கர நாற்காலி பயனாளரான தெலங்கானாவை சேர்ந்த முகமது ஃபாரூக், தன்னம்பிக்கையுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான பல சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற்றும் அவருக்கு இன்னும் ஒரு அரசு வேலை கூட கிடைக்கவில்லை என்பது, திறமையான விளையாட்டு வீரர்களை அரசு இனங்கண்டு ஊக்கப்படுத்த தவறிவிடுகிறதோ என தோன்றுகிறது.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 37 வயதான முகமது ஃபாரூக், தன் ஐந்தாவது வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டவர். ஆனால், அதற்கு முன்பிருந்தே கிரிக்கெட் விளையாடுவதென்றால் ஃபாரூக்குக்கு கொள்ளை பிரியம். அதனால், சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய நிலை வந்துவிட்டதே என துவண்டுவிடாமல், தொடர்ந்து விளையாட ஆரம்பித்தார்.
இதுகுறித்து, The News Minute இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “எனக்கு கிரிக்கெட் மீது எப்போதும் ஆர்வம் உண்டு. சிறிய வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாடுவதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.”, என கூறினார்.
பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளிலும் தனி சிறப்பை பெற்ற ஃபாரூக், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
“கடந்த 2002-ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வீல்சேர் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் பங்கேற்றேன். அந்த போட்டிக்கு செல்வதற்கும் முன்பும், பின்பும் எனக்கென எந்த உதவியும் யாரும் செய்யவில்லை. எனக்கென பயிற்சியாளர் கூட இல்லை. நான் பல்வேறு விளையாட்டு க்ளப்புகளில் பயிற்சிக்காக சென்று விசாரிப்பேன். ஆனால், என்னால் இயலாத அளவுக்கு அவர்கள் பணம் செலுத்த சொல்வார்கள்”, என கூறுகிறார், தகுதியும் திறமையும் இருந்தும் அரசாங்கத்தால் இன்றுவரை கண்டுகொள்ளப்படாத ஃபாரூக்.
”இவை எல்லாவற்றையும் தாண்டி தெலங்கானாவின் அனுபவம் வாய்ந்த விளையாட்டு வீரராக உருவாக நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். பல விளையாட்டுகளை தகுந்த உதவியின்மையால் நான் தவிர்த்திருக்கிறேன். ஆனால், கிரிக்கெட் விளையாட்டு எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானது.”, எனக்கூறும் ஃபாரூக் இந்தியாவின் பிரதிநிதியாக தன் சொந்த செலவில் பல நாடுகளுக்கு சென்று விளையாடியுள்ளார்.
“மலேசியாவில் நான் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்கிறேன். காத்மண்டில் நடைபெற்ற போட்டியிலும் பங்கேற்றிருக்கிறேன். இந்தியாவில் நேபாளுக்கு எதிரான போட்டி ஒன்றிலும், பங்களாதேஷிலும் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியிருக்கிறேன்”, என கூறுகிறார் ஃபாரூக்.
இந்த போட்டிகளில் பங்கேற்க கடும் முயற்சி செய்யும் ஃபாரூக் தன் நிதி ஆதாரத்திற்காக, பெரும்பாலும் உறவினர்களையும், நண்பர்களையுமே நம்பியிருக்கிறார். பயணச்செலவு, தங்கும் இடம், உணவு என கடும் செலவுகளுக்காக, வங்கியிலும், தன் நண்பர்களிடமும் கடன்கள் வாங்குவதாக கூறும் ஃபாரூக், தான் இப்போது கடும் கடன் பிரச்சனைகளில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கிறார்.
தன் உடல் நிலைமையையும் மீறி தொடர்ந்து சாதித்துக் கொண்டிருக்கும் ஃபாரூக்-க்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறார் ஃபாரூக்.
தனக்கு தேவையான நிதியுதவி வழங்கவும், பயிற்சியாளரை நியமிக்கவும் கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் வரை மனு கொடுத்தும் பயனில்லை என்கிறார் ஃபாரூக்.
”உதவி கேட்பதற்காக தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்திக்க பல முறை சென்றேன். ஆனால், என்னை தலைமை செயலகத்தின் உள்ளேயே விடாமல் நுழைவு வாயிலோடு திருப்பி அனுப்பி விடுவார்கள்.”, என ஃபாரூக் கூறும்போது, இயலாதவர்களுக்காக அரசு இல்லையா என கேட்க தோன்றுகிறது.
”என் நாட்டுக்காக பல விருதுகள், பதக்கங்கள், பரிசுகள் பெற்றும், என்னால் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் அரசு வேலை பெறுவதற்காக இன்னும் அலைந்து கொண்டிருக்கிறேன்.”, என தெரிவித்த ஃபாரூக், கர்நாடகா, ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் செய்த உதவிகளை சுட்டிக் காட்டினார்.
”ஆந்திரா, தெலங்கானம் இரண்டு மாநிலங்களும் ஒன்றாக இருந்தபோது கூட, ஆந்திர அரசு எனக்காக ஒன்றும் செய்யவில்லை. எனக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை.”, என கையறு நிலையில் தெரிவிக்கிறார்.
வரும் அக்டோபர் 13-ஆம் தேதி சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக ஃபாரூக் காத்மண்டு செல்லவிருக்கிறார். அதற்காக அவருக்கு நிதி ஆதாரம் இல்லை. இத்தனை திறமைகளும், நம்பிக்கையும், விடாமுயற்சியையும் நமக்கு பாடமாக கூறியிருக்கும் ஃபாரூக்குக்கு நம்மால் இயன்றதை செய்வோம்.
அவருடைய வங்கிக்கணக்கு விவரம்:
INDIAN BANK, KARIMNAGAR branch
Name: MD. FAROOQ AHMED
Account Number: 493214862
IFSC Code: IDIB000K021
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.