மருமகளுக்கு ஆதரவாக நின்று 4 கோடி ஜீவனாம்சம் வாங்கிக் கொடுத்த மாமியார்!

"என் மகனால் எனது மருமகளுக்கு ரூ. 5 கோடி ஜீவனாம்சம் வழங்க முடியும்” என மருமகளுக்கு ஆதரவாக மாமியார் சாட்சியம் அளித்தார்.

By: August 9, 2017, 2:39:44 PM

மறைந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் கஷ்யப்பானவரின் மகன் தேவானந்த். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது சகோதரியின் மகளை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதால், 2012-ஆம் ஆண்டில் இருந்து இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், ரம்யா விவகாரத்துக் கோரி பெங்களூரு மாநகர 5-வது கூடுதல் முதன்மை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜரான ரம்யா, “எனது தாத்தாவும், மாமனாருமான கஷ்யப்பானவரின் கட்டாயத்தின் பேரிலே தேவானந்த் என்னை திருமணம் செய்து கொண்டார். எனது திருமணத்தின் போது நான் பிபிஏ படித்துக் கொண்டிருந்தேன். எனது விருப்பத்தை மீறி இந்த திருமணம் நடைபெற்றது. ஒரு வருடம் கூட என்னுடன் வாழாத நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இருவரும் தனித்தனியாக வசித்து வருகிறோம். தற்போது எனக்கு 25 வயது ஆவதால், எனது எதிர்காலத்துக்காக ரூ.5 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்”என முறையிட்டார்

இதையடுத்து நீதிமன்றம் தேவானந்தின் தாய் லட்சுமியை விசாரித்தபோது, “எனது மகனிடம் ஏராளமான சொத்துகள் உள்ளன. குவாரி தொழில் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார் பயன்படுத்துகிறார். எனவே, தேவானந்தால் எனது மருமகளுக்கு ரூ. 5 கோடி ஜீவனாம்சம் வழங்க முடியும்” என மருமகளுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.பாக்யா, “இந்து திருமண சட்டம், 1955 பிரிவு 13 (1) , 9 (b) ஆகியவற்றின்படி இருவருக்கும் விவகாரத்து வழங்கப்படுகிறது. தேவானந்த் தனது முன்னாள் மனைவியின் எதிர்கால தேவைக்காக ரூ. 4.85 கோடி ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். அதுவும் 60 நாட்களுக்குள் இந்தத் தொகையை அவருக்கு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு வெளியானதும் மருமகளும், மாமியாரும் ஆரத் தழுவி, தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.

எதிரும் புதிருமான உறவாக கருதப்படும் மாமியார் மருமகள் இருவரும் இவ்வழக்கில் தாயாகவும், மகளாகவும் நடந்துக்கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், மாமியார் – மருமகள் சண்டைக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது என்பதையும் அவர்கள் உணர்த்தியுள்ளனர். இருப்பினும், தனது தாயின் இந்த நடவடிக்கையால் தேவானந்த் கோபத்தில் நீதிமன்றத்தைவிட்டு வேகமாக வெளியேறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Mom in law backs woman son to pay rs 4 crore alimony

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X