மக்களவையில் மோடியை கட்டியணைத்த ராகுல் காந்தியை சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பாராட்டி பல்வேறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
நேற்று மக்களையில் நடைப்பெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அதிர்ச்சியூட்டும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. பரபரப்பாக நடந்துக் கொண்டிருந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது ராகுல் காந்தி மோடியை கட்டிப்பிடித்தது, அதன் பின்பு இதெல்லாம் நாடகம் என்பது போல் கண் அடித்தது மக்களவையில் சலசலைப்பை ஏற்படுத்தியது.
மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. இருந்தபோதும் நேற்று மக்களையில் மோடி அரசுக்கு எதிராக சூளுரையாற்றிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல், திடீரென்று ஓடிச் சென்று மோடியை கட்டியணைத்தும், உடனே ராகுலை மோடி தட்டிக் கொடுத்தது மக்களைவில் அரங்கேறிய உச்சபட்ச சுவாரிசியமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதுக்குறித்து கருத்து கூறியுள்ள சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் ”மோடியை ராகுல் கட்டிப்பிடிக்கவில்லை. ராகுல் மோடிக்கு அளித்த மிகப்பெரிய ஷாக்” என்று கூறியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/2-50.jpg)
மும்பையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய சஞ்சய் ராவத், “நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி சிறப்பாக பேசியதன் மூலம், அவர் உண்மையான அரசியல் பள்ளிக்கூடத்தில் இருந்து பட்டம் பெற்றுவிட்டார்.நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது பிரதமரை ராகுல் காந்தி கட்டிப்பிடிக்கவில்லை. மோடிக்கு ராகுல் காந்தி அளித்த மிகப்பெரிய அதிர்ச்சியாகவே பார்க்கிறோம்.இதுப்போன்ற அதிர்ச்சிகள் பாஜவுக்கு இன்னும் எதிர்காலத்தில் காத்துக்கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
மக்களைவில், மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சிவசேனா முதலில் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறியிருந்தது. ஆனால் இரவோடு இரவாக சிவசேனா திடீரென்று தனது முடிவை மாற்றிக் கொண்டது. அதன் பின்பு மக்களைவில் பாஜகவிற்கு ஆதரவும் அளிக்காமல் பாஜக அரசுக்கு எதிராக லோக்சபாவில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்து சிவ சேனா கட்சி வெளிநடப்பு செய்தது.