நாளை மழைக்காலக் கூட்டத்தொடர்: முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு

ஊழல் தடுப்பு சட்ட திருத்த மசோதா, மோட்டார் வாகன திருத்த மசோதா, உள்ளிட்டோ மசோதாக்கள் உள்ளிட்ட 14 மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்றும்...

இந்திய-சீன எல்லை பிரச்சனை, ஜம்மு-காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, மாட்டிறைச்சி தடை மற்றும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்கள் மீதான தாக்குதல், அமர்நாத் தாக்குதல், எல்லையில் நிலவும் பதற்றம் என பல்வேறு பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு மத்தியில் திங்கள் கிழமை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது.

இந்த மழைக்கால கூட்டத்தொடரில், காங்கிரஸ், சி.பி.எம்., திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசிய காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர் கட்சிகள் சீனாவுடனான எல்லை பிரச்சனை, அமர்நாத் யாத்திரீகர்கள் மீதான தாக்குதல், ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகள், பல மாநிலங்களில் பல்வேறு காரணங்களுக்காக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

”தேச பாதுகாப்பை பாதிக்கும் எந்தவொரு சம்பவங்கள் குறித்தும் அனைத்து இந்தியர்களும் ஆலோசிக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து பிரச்சனைகளையும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி குரல் எழுப்புவோம். பெட்ரோலியம், மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றிற்கு ஜி.எஸ்.டி. வரிவிதிக்க நாங்கள் வலியுறுத்துவோம். மாண்ட்சவுரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான தாக்குதல் குறித்தும் நாங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் எழுப்புவோம்.”, என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சி.பி.எம். கட்சி, சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தாக்குதல், பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொலை செய்தல் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள், சி.பி.ஐ, அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு மத்திய அரசு எதிர்கட்சிகளை ஒடுக்குவதாக எழுந்த புகார் குறித்து அவையில் பேசும் என கூறப்படுகிறது.

அதேவேலையில், எதிர்கட்சிகளை சமாளிக்கும் விதத்தில் பாஜகவினருக்கு பிரதமர் மோடி திங்கள் கிழமை ஆலோசனை வழங்குவார் எனவும் சொல்லப்படுகிறது. ஊழல் தடுப்பு சட்ட திருத்த மசோதா, மோட்டார் வாகன திருத்த மசோதா, உள்ளிட்டோ மசோதாக்கள் உள்ளிட்ட 14 மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close