ஒரு மாநில அரசு அம்மக்களுக்கு கல்வியில் எத்தகைய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டே அம்மாநிலத்தின் வளர்ச்சி பெரும்பாலும் கவனிக்கப்படுகிறது. கல்வியில் முக்கியமான அம்சம் தரமான பள்ளி கட்டடம். கூரை பள்ளிக்கூடத்தில் படித்ததால், கும்பகோணத்தில் தீ விபத்தில் ஏராளமான பிஞ்சுக் குழந்தைகள் இரையானதை நாம் மறந்திருக்க மாட்டோம். மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிக்கு கட்டடம் இல்லாததால், அப்பள்ளிக்கு வரும் சின்னஞ்சிறு குழந்தைகள் கழிவறையில் அமர்ந்து படிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சௌகான் முதலமைச்சராக இருக்கிறார். அம்மாநிலத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக மாநில அரசு சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், அங்குள்ள நீமுச் எனும் மாவட்டத்தில் அரசு ஆரம்ப பள்ளியில் கட்டடம் இல்லாததால், குழந்தைகள் கழிவறையில் அமர்ந்து படிக்கும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். இப்படியொரு பள்ளி இருப்பதே அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியாமல் இருப்பதுதான் கொடுமையின் உச்சம். இதுகுறித்து மாநில கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: இப்பள்ளிக்கூடம் 2012-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அப்போது, வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த நிலையில், தற்போது அந்த வாடகை கட்டடமும் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் இந்த அவல நிலையை உணர்த்தும் புகைப்படத்தில், 34 குழந்தைகள் கழிவறையில் அமர்ந்து படிக்கின்றனர். மழைக்காலங்களில் அங்குள்ள ஆடுகள் நனைந்துவிடாமல் இருக்க அவை அதே கழிவறையில் கட்டப்படுகின்றன.
இதுகுறித்து அப்பள்ளியின் ஆசிரியர் கைலாஷ் சந்திரா கூறியதாவது, “பருவநிலை நன்றாக இருந்தால், மரத்தடியில் வகுப்புகள் நடத்துவேன். ஆனால், இப்போது மழைக்காலமாக இருப்பதால் அங்கு வகுப்பு நடத்த முடியவில்லை. அதனால், கழிவறையில் நடத்தும் நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். இதுகுறித்து பலமுறை நான் கல்வித்துறையிடம் புகார் அளித்தேன். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.”, என்றார்.
ஆனால், அத்தொகுதி கைலாஷ் சாவ்லா, மாணவர்கள் கழிவறையில் படிக்கும் நிலையில் பள்ளி எதுவும் செயல்படவில்லை என மறுத்தார்.
இந்த பள்ளியின் நிலைமை குறித்து விளக்கி, புதிய கட்டடம் கட்டித்தருமாறு மாவட்ட கல்வி அதிகாரி, மாநில கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.