மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முஸ்தபா டோசா, உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி, மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் 12 இடங்களில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் சுமார் 257 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 713 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, மும்பை தடா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அந்த வழக்கின் மீதான தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டது. அதில், அபு சலீம், முஸ்தபா டோசா ஆகிய 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. அப்துல் கயூம் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முஸ்தபா டோசா, உடல்நலக் கோளாறு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக ஜே.ஜே.மருத்துவமனையின் டீன் அறிவித்துள்ளார்.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட யாகுப் மேமன் கடந்த 2015-ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். மேலும், இது தொடர்புடைய, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹீம், அனிஸ் இப்ராஹீம், டைகர் மேமன் உள்ளிட்ட 27 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் அனைவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதே வழக்கில் தான் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை அனுபவித்து பின் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.