’பாகுபலி’ ஸ்டைலில் நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்து உயிரைவிட்ட தொழிலதிபர்

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரபால் படில் மேற்குவங்காளம் சாஹாபூரில் உள்ள உயரமான நீர்வீழ்ச்சியிலிருந்து பாகுபலி ஸ்டைலில் குதித்து உயிரிழந்தார்.

பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகத்தில் நாயகன் பிரபாஸ் மிக உயரமான நீர்வீழ்ச்சியிலிருந்து தாவி மறுபக்கத்தை அடைவதைபோல், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உண்மையாகவே உயரமான நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ராஜமௌலியால் இயக்கப்பட்டு உலகளவில் பெயர்பெற்ற திரைப்படம் பாகுபலி. அத்திரைப்படத்தின் முதல்பாகத்தில் நாயகன் பிரபாஸ் சிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியின் மீது ஏறி தாவிகுதித்து நீர்வீழ்ச்சியின் மறுபக்கத்தை நாயகன் பிரபாஸ் அடைவார்.

இது படத்தில் வரும் பல்வேறு கிராஃபிக்ஸ் காட்சிகளைப் போலவே இதுவும் கிராஃபிக்ஸ் காட்சிதான். திரைப்படங்களில் வரும் சாதாரண சண்டைக் காட்சிகளையே யாரும் நிஜத்தில் முயற்சித்துப் பார்க்கக் கூடாது. அப்படி இருக்கும்போது பாகுபலியில் வரும் இந்த காட்சியை முயற்சிக்க வேண்டும் என கனவிலும் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது.

ஆனால், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரபால் படில் மேற்குவங்காளம் சாஹாபூரில் உள்ள மாஹாலி கோட்டையில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சியிலிருந்து பாகுபலி ஸ்டைலில் குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

“எங்களுக்கு போலீஸ் தெரிவித்துதான் இந்த விஷயம் தெரியும். எல்லோருக்குமே இது அதிர்ச்சிகரமானதாக இருந்தது”, என உயிரிழந்தவரின் சகோதரர் மகேந்திரா தெரிவித்தார்.

×Close
×Close