மும்பையில் 14 வயது சிறுவன் ஒருவன், ’தி புளூ வேல்’ (The Blue Whale) என்ற இணையத்தில் விளையாடும் விளையாட்டில் வெற்றி பெறுவதற்காக 5-வது மாடியிலிருந்து குதித்து பரிதாபமாக உயிரைவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மும்பையை சேர்ந்த 14 வயது சிறுவன் அம்ப்ரீத் சிங், கடந்த சனிக்கிழமை தன் வீட்டின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். எனினும், அவனது வீட்டில் எந்தவொரு தற்கொலை கடிதமும் சிக்கவில்லை. அவனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ‘தி புளூ வேல்’ (The Blue Whale) என்ற இணைய விளையாட்டை தொடர்ந்து விளையாடியதாகவும், அதில் வெற்றிபெறவே சிறுவன் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து உயிரைவிட்டதாக தெரியவந்தது.
’தி ப்ளூ வேல்’- ஸ்னாப் சாட், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த விளையாட்டை விளையாட முடியும் என தெரிகிறது. இந்த விளையாட்டை நிர்வகிப்பவர்கள், அதில் பங்கேற்பவர்களுக்கு தினமும் ஒரு சவாலை தருவார்கள். அதனை போட்டியாளர்கள் செய்து முடித்து, அதன் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். ஆரம்பத்தில் சாதாரண சவால்களே போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். உதாரணமாக ஒருவகை இசையை கேட்க வேண்டும். அவர்கள் சொல்லும் நேரங்களில் தனியே நடக்க வேண்டும் குறிப்பாக நள்ளிரவு நேரங்களில். திகில் திரைப்படங்களை காண வேண்டும் என்பது போன்ற சவால்கள் கொடுக்கப்படும்.
அதன் பின், உயிருக்கே ஆபத்தான சவால்களை போட்டியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். தனது கைகள் உள்ளிட்ட உடற்பாகங்களில் குறிப்பிட்ட வடிவங்களை கத்தியால் கிழித்து வரைந்துகொள்ள வேண்டும். அதன்பின், 50-வது நாளில் அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற சவால் தரப்படும். இந்த சவாலை நிறைவேற்றத்தான் சிறுவன் அம்ப்ரீத் சிங் உயிரை விட்டதாக காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/blue-wale-suicide-game_759-300x217.jpg)
ஒருவேளை அந்த சவாலை போட்டியாளர்கள் நிறைவேற்றாவிட்டால், ஏற்கனவே போட்டியாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்து அவருடைய குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அந்த விளையாட்டு எச்சரிக்கும் என கூறப்படுகிறது.
இந்த விளையாட்டு, ரஷ்யாவிலிருந்து தொடங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், பல நாடுகளில் 150 பேர் இந்த விளையாட்டால் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தான் சிறுவன் தற்கொலை செய்துகொண்டான் என்பது உறுதியானால், இந்தியாவில் இணைய விளையாட்டால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது இதுவே முதல்முறையாகும்.