ஷீனா போரா கொலை வழக்கை விசாரணை செய்து வந்த காவல் ஆய்வாளரின் மனைவி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷீனா போரா கொலை வழக்கானது மும்பை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுது. தாயே மகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய இந்த வழக்கை காவல் ஆய்வாளர் ஞனேஷ்வரர் கனோர் விசாரணை செய்து வருகிறார். இவர் தலைமையிலான குழு தான் ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாய் இந்திராணியையும் கைது செய்தது.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஞனேஷ்வரர் கனோரின் மனைவி டிம்பிள் கனோர் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். கனோரின் மகன்தான் இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வருகிறார். இந்த கொலையை தான்தான் செய்ததாக கனோரின் மகன் குறிப்பு எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அவரது மொபைல் போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் ஆன நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கனோர் தனது வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு இன்று வந்துள்ளார். அப்போது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தனது மனைவி கிடப்பதைக் கண்டு அதிர்சியடைந்தார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்த அவர், உடனடியாக தனது மனைவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளர்.