தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அரசை கவிழ்க்க பாஜக சதி செய்ததாக தெலங்கானா முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவ் ஞாயிற்றுக்கிழமை (அக்.30) குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக, புதன்கிழமை இரவு மொய்னாபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் நான்கு டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக மூன்று பேரை சைபராபாத் போலீசார் கைது செய்தது.
இது குறித்து முதன்முறையாக பகிரங்கமாக பேசிய கேசிஆர், முனுகோட்டில் நடந்த கூட்டத்தில், “தெலங்கானாவின் சுயமரியாதை விற்பனைக்கு இல்லை” என்றார்.
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் ரோஹித் ரெட்டி, ஜி பால்ராஜ், ஹர்வர்தன் ரெட்டி மற்றும் ஆர் காந்த ராவ் ஆகிய நான்கு எம்எல்ஏக்களை சுட்டிக் காட்டி பேசினார்.
அப்போது, “எனது கட்சியின் இந்த நான்கு எம்எல்ஏக்களும் என்னுடன் இருக்கிறார்கள். விசுவாசத்தை மாற்ற டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட தரகர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயை அவர்கள் மறுத்துவிட்டனர். இது தெலங்கானாவின் சுயமரியாதைக் கொடி. இவர்கள்தான் அரசியலில் உண்மையான தலைவர்கள்” என்றார்.
அப்போது, பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் தனது அரசாங்கத்தை கவிழ்க்க "ஆபரேஷன் தாமரை" யில் ஈடுபட்டுள்ளதாக டிஆர்எஸ் தலைவர் சூசகமாக தெரிவித்தார்.
மேலும், நான்கு டிஆர்எஸ் எம்எல்ஏக்களை கவர்ந்திழுக்கும் நடவடிக்கை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து இதுபோன்ற அரசியல் நாட்டுக்கு நல்லதல்ல என்றும் கேசிஆர் தெரிவித்தார்.
மேலும், “எங்கள் சுயமரியாதையை வாங்க வந்தவர்கள் சிறையில் உள்ளனர். நாட்டில் அதைவிட உயர்ந்த பதவி வேறெதுவும் இல்லை.
இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள மோடி, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்த்து அதிக அதிகாரத்தை அபகரிக்க முயற்சிப்பது ஏன்?
மாநில அரசுகளுக்கு ஏன் இந்தக் கொடுமை? உங்களுக்கு இன்னும் எவ்வளவு சக்தி தேவை, உங்களுக்குத் தெரியாமல் இது நடந்ததா? உங்களுக்காக வேலை செய்பவர்களும், ஆர்எஸ்எஸ் தலைவர்களும் சதி செய்து எனது அரசை கவிழ்க்க ஹைதராபாத் வந்தனர், ஆனால் அவர்கள் இப்போது சிறையில் உள்ளனர்” என்றார்.
தொடர்ந்து, கழுதைக்கு புல் கொடுத்தால் பசு மாட்டில் பால் கிடைக்குமா? எனவும் கேள்வியெழுப்பினார். மேலும் மத்திய அரசு கைத்தறி துணிக்கு 5 சதவீதம் சரக்கு சேவை வரி விதித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பின்னர், முனுகோடு தொகுதியில் ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் வசிக்கின்றனர். “வரி மற்றும் ஜிஎஸ்டி மூலம் அனைவரையும் மோடி தண்டிக்கிறார். நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா? எனக் கேள்வியெழுப்பினார்.
இடைத்தேர்தல்
தெலங்கானா முதலமைச்சர் கே சந்திர சேகர் ராவ், துப்பாக்கா, ஹுசூராபாத் மற்றும் நாகார்ஜுனா சாகர் இடைத்தேர்தல்களில்
பரப்புரை செய்யவில்லை.
இந்த நிலையில் முனுகோடுவில் பரப்புரை செய்துள்ளார். முனுகோடு இடைத்தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil