அப்துல் கலாமிற்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம்: நாளை திறப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமிற்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் வியாழக் கிழமை திறக்கப்பட உள்ளது.

ஏவுகணை மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர், முன்னாள் குடியரசு தலைவர் என பன்முகத் தன்மை கொண்ட மறைந்த ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், இந்திய இளைஞர்களுக்கு பலவகைகளில் முன்னுதாரணமாக திகழ்கிறார். கனவு, லட்சியம், முன்னேற்றம், நம்பிக்கை குறித்து அவருடைய மேற்கோள்கள் என்றென்றும் மக்கள் நினைவில் இருக்கும்.

அப்துல் கலாமின் சாதனைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை வரும் சந்ததியினர் தெரிந்துகொள்ளும் விதத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் வியாழக் கிழமை திறக்கப்பட உள்ளது. இதனை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் திறந்து வைக்கிறார். இந்நிகழ்வில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் சிவன், கேரள சட்டசபையின் துணை சபாநாயகர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம் என பெயரிடப்பட்டுள்ள அருங்காட்சியகம், தென்னிந்தியாவிலேயே பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் அப்துல்கலாமின் தனிப்பட்ட வாழ்க்கை முறை, அவருடைய அரிய புகைப்படங்கள், சிறிய வடிவங்களிலான ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள், அவருடைய புகழ்பெற்ற மேற்கோள்கள் இடம்பெற்றிருக்கும்.

அப்துல் கலாமின் கொள்கைகளை பரப்பும் விதமாக இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“இந்த அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம், ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கையை வருங்கால சந்ததியினர் அறிந்துகொண்டு அதன் மூலம் வாழ வழிபுரியும்.”, என இந்த அருங்காட்சியகத்தின் செயல் தலைவர் சாய்ஜூ டேவிட் தெரிவித்தார்.

×Close
×Close