‘இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களை அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் செய்வதற்கான வழிகாட்டுதல்கள்- 2022’ க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கீழ் தொலைக்காட்சி சேனல்கள் தேசிய மற்றும் பொது நலன் சார்ந்த தகவல்கள் ஒளிபரப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வழிகாட்டுதல்கள் நவம்பர் 9 முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இத்தகைய உள்ளடக்கத்தை உருவாக்க சேனல்களுக்கு அவகாசம் வழங்கப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது நலன் மற்றும் தேசிய நலன் தொடர்பான தகவல்கள் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும். இதற்காக 8 கருப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேனல்கள் தகவல் உருவாக்கி ஒளிபரப்ப வேண்டும்.
டிவி/ரேடியோ பொது சொத்து மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள டிவி சேனல்கள் தேசிய முக்கியத்துவம் மற்றும் சமூகம் பற்றிய கருப்பொருள்களில் தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும்.
8 கருப்பொருள்
1. கல்வி மற்றும் எழுத்தறிவு 2. விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு 3. உடல்நலம் மற்றும் குடும்ப நலன் 4. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 5. பெண்கள் நலன் 6. சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலன் 7. சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாப்பு 8. தேசிய ஒருங்கிணைப்பு ஆகிய தலைப்புகளின் கீழ் தினமும் தகவல்கள் ஒளிபரப்ப வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா கூறுகையில், “தொலைக்காட்சி நிறுவனங்கள், ஒளிபரப்பாளர்கள் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு தகவல்கள்
ஒளிபரப்புவதற்கான நேரம் ஒதுக்கப்படும். மேலும் இதை ஒரே மாதிரியாக செயல்படுத்துவதற்கான தேதியும் முடிவு செய்யப்படும் என்றார்.
இது செயல்படுத்தப்பட்டதும் சேனல்கள் கண்காணிக்கப்படும். யாராவது இதை கடைபிடிக்காமல் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்படும். சில சேனல்களை தவிர மற்ற அனைத்து சேனல்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும். இது தொடர்பான விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.
இந்த புதிய வழிகாட்டுதலில் சில சேனல்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அதில், விளையாட்டு சேனல்கள், வனவிலங்கு சேனல்கள் மற்றும் வெளிநாட்டு சேனல்களுக்கு விலக்கு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. விளையாட்டு சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் நேரங்களில் விலக்கு அளிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil