இந்தியாவில் பெண்களை பாதுகாக்க பல சட்டங்கள் இருப்பினும், அவர்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் ஒவ்வொரு நாளும் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பெண்களை பாதுகாக்கவென்று சில சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதனை, பெண்கள், ஆண்கள் என பாலின பேதமின்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், அந்த சட்டங்கள் வழியாக சென்றுதான் நாம் போராட முடியும்.
1. வரதட்சணை தடுப்பு சட்டம், 1961:
வரதட்சணை வாங்குவதையும், கொடுப்பதையும் தடுப்பதற்கான சட்டம் இது. இச்சட்டத்தின்படி, வரதட்சணை வாங்குபவர்களுக்கு, வாங்கப்பட்ட வரதட்சணை மதிப்பை பொறுத்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் மற்றும் ரூ.15,000 (அ) அதற்கும் மேல் அபராதம் விதிக்கப்படும். மேலும், இச்சட்டத்தின்படி வரதட்சணை கேட்பதே தண்டனைக்குரிய குற்றமாகும். வரதட்சணை கேட்பவர்கள் குறைந்தபட்சம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை பெறுவர்.
2. பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம், 2013:
இந்த சட்டத்தின்படி, 10 பெண்களுக்கு மேல் பணியாளர்களைகொண்ட அலுவலகத்தில், பெண்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலக அளவிலான குழு அமைக்கப்பட வேண்டும். இதன்படி, அலுவலகத்தில் உள்ளவர்கள் விரும்பத்தகாத சைகைகளை செய்தல், பாலியல் ரீதியிலான வார்த்தைகளை கூறுதல், நடவடிக்கைகளில் ஈடுவடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
3. கடத்தல் தடுப்பு சட்டம், 1986:
பாலியல் வியாபார நோக்கத்துக்காக பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்துவதை தடுக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மாதங்கள் சிறை, ரூ.30,000 வரை அபராதம் தண்டனையாக கிடைக்கும்.
4. சதி தடுப்பு சட்டம், 1987:
இறந்த கணவரின் உடலோடு, மனைவியையும் எரிக்கும் மூட பழக்கத்தை இச்சட்டம் தடுக்கிறது. இக்குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் கிடைக்கும்.
5. பெண்களை அநாகரிகமாக சித்தரித்தல் (தடுப்பு) சட்டம், 1986:
புத்தகங்கள், கட்டுரைகள், விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், ஓவியங்கள் உள்ளிட்டவற்றில், பெண்களை அநாகரிகமாக சித்தரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமே. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.2,000 அபராதமும் கிடைக்கும்.