அனைவரும் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆதார் எண்ணை வங்கி கணக்குகளுடன் இணைப்பது கட்டயமாக்கப்பட்டது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ரிசர்வ் வங்கியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என அந்த வங்கி மறுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியாகின. தற்போது, அந்த செய்தியைத்தான் ரிசர்வ் வங்கி மறுத்து, வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என கூறியுள்ளது.
இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 1, 2017 அன்று வெளியான அரசு கெஜட்டில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் 2-வது திருத்த விதிகளின்படி, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேற்கொண்டு அறிவுரைகளுக்கு காத்திருக்காமல், அனைத்து வங்கிகளும் இதனை செயல்படுத்த வேண்டும்.”, என கூறப்பட்டுள்ளது.
ஆதார் தொடர்பான வழக்குகளில், தனிநபர் ரகசியம் காத்தல் என்பது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஆனால், அந்த வழக்குகளில் இறுதி தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில், ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்பதை நிறுத்திவைக்க வேண்டும் என, சில வங்கிகள் தெரிவித்துள்ளன.
வங்கிகளில் ஏற்கனவே கணக்கு வைத்திருப்போர், அதனுடன் ஆதார் எண்ணை வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இணைப்பது கட்டாயம் எனவும், அப்படி இணைக்காவிட்டால் அந்த வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், வங்கிகளை வரைமுறைப்படுத்தும் அமைப்பான ரிசர்வ் வங்கி இதனை தெரிவிக்காமல், மத்திய அரசு ஏன் இதை கட்டாயமாக்குகிறது எனவும், வங்கிகளும், வாடிக்கையாளர்களும் என்ன செய்ய வேண்டுமென்பதை மத்திய அரசு சொல்லக்கூடாது எனவும், பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, வங்கிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க ரிசர்வ் வங்கிக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகளில் கணக்கு துவங்குதல், ரூ.50,000க்கும் மேலான பரிவர்த்தனை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பண பரிவர்த்தனைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி மத்திய அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தனிநபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிரந்த கணக்கு எண்ணை (PAN) வைத்திருப்பதை தடுக்க, பான் அட்டைகளுடன் ஆதாரை இணைப்பதும் கட்டாயமாக்கி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2017-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனிநபர்களின் செல்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு, சமீப காலமாக அறிவுறுத்தி வருகிறது.
எல்லாவற்றுக்கும் ஆதார் கட்டாயம் என்ற நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காததால், உணவு பொருட்கள் வழங்கப்படாததால், ஏழை சிறுமி பசியால் உயிரிழந்த கொடுமை அரங்கேறியது.
இப்படி, அரசு திட்டங்கள், அடிப்படை தேவைகளுக்கெல்லாம் ஆதார் எண்ணை கட்டாயமாக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் எச்சரித்தும், மத்திய அரசு அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.