மகாராஷ்டிராவின் அசன்கன் பகுதி அருகே நாக்பூரிலிருந்து மும்பை நோக்கி சென்ற துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒன்பது பெட்டிகள் மற்றும் ரயில் என்ஜின் இன்று காலை தடம் புரண்டது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயம் அடையவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காலை 6:35 மணியளவில் அசன்கான் ரயில் நிலையத்தில் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி சென்றது. தகவல் அறிந்ததும் மீட்பு குழு மற்றும் மருத்துவ குழுவானது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் முதலுதவி பணிகளை தொடங்கியது.
இவ்விபத்து குறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் சக்சேனா கூறுகையில், “ரயில் தடம் புரண்ட சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இந்த ரயில் விபத்து ஏற்பட்டது. கடந்த நான்கு நாட்களாக, மும்பை பெருநகரப் பகுதி மற்றும் மும்பை-புனே-நாஷிக் மற்றும் கொங்கன் ஆகியவை கடும் மழைகளால் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார்.
முன்னதாக, கடந்த 19-ஆம் தேதி ஒடிசா மாநிலம் பூரி நகரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சென்ற உத்கால் எக்ஸ்பிரஸ், முசாபர்நகர் அருகே கடவுளி என்ற இடத்தில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். 156 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதேபோல், ஆகஸ்ட் 23-ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் 100 பயணிகள் காயம் அடைந்தனர். ஆகஸ்ட் 25-ம் தேதி மும்பையில் அந்தேரி நோக்கிச் சென்ற ரயில் தடம் புரண்டதில் 6 பயணிகள் காயம் அடைந்தனர்.
இந்த விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே வாரியத் தலைவர் ஏ.கே.மிட்டல் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் இன்று மகாராஷ்டிராவில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் ரயில் தடம் புரண்டு விபத்து நேரிடுவது இது நான்காவது சம்பவமாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 586 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,011 பேர் பலியாகியுள்ளனர். இதனால், பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்வதற்கே அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது.