இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு நேற்று வந்தார். அங்கு, துவாரகாவில் உள்ள துவாரகதீஷ் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்ட பிரதமர் மோடி, அங்கு நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். போர்பந்தர்- துவாரகா இடையே 110 கி.மீ. துரத்துக்கு ரூ.1600 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 4 வழிச்சாலையை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, தான் பிறந்த சொந்த ஊரான வாத்நகருக்கு இன்று பிரதமர் மோடி காரில் சென்றார். அவர் பிரதமரான பிறகு இங்கு செல்வது இதுவே முதல் முறையாகும். எனவே அங்கு வழிநெடுக கூடியிருந்த பொதுமக்கள் அவருக்கு பூதூவி வரவேற்றனர்.
அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியை திறந்து வைத்தார். இந்த விழாவில் குஜராத் முதலமைச்சர் விஜயரூபாஷி, துணை முதல்வர் நிதின்படேல், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா ஆகியோரும் கலந்து கொண்டனர். மருத்துவ கல்லூரியை திறந்து வைத்த பின் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் ரூ.500 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், "பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக ‘இந்திர தனுஷ்’ சுகாதார காப்பீடு திட்டத்தை குறிப்பிட விரும்புகிறேன். நமது நாட்டுக்கு முதன் முறையாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசு தான் சுகாதார காப்பீடு திட்டத்தை கொண்டு வந்தது.
அதன்பின்னர் நமது அரசு புதிதாக ஒரு காப்பீடு திட்டத்தை தற்போது கொண்டு வந்துள்ளது. இந்தியாவை ஆண்ட முந்தைய மத்திய அரசுகள் காலத்தில் நாடு எந்த வளர்ச்சியும் அடையவில்லை.
நான் இன்று உங்கள் ஆசியுடன் இங்கு மீண்டும் திரும்பி வந்திருக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பேன் என உங்கள் முன் உறுதி அளிக்கிறேன். நான் இன்று பிரதமராக இருக்கலாம். அந்த பெருமை அனைத்தும் இந்த ஊருக்குதான்" என்றார்.
முன்னதாக, தான் படித்த பள்ளிக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு வெளியே இருந்த மண்ணை எடுத்து மூன்று முறை நெற்றியில் பூசிக் கொண்டார். அப்போது சுற்றியிருந்த மக்கள் கோஷங்கள் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.