”மோடியின் இஸ்ரேல் பயணம் பாலஸ்தீன உறவை பாதிக்கக் கூடாது”: சசிதரூர்

“மோடியின் இஸ்ரேல் பயணத்தால் இருநாட்டு உறவும் முழு முதிர்ச்சியை அடைந்தாலும், இந்த பயணம் பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது”

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு முதல் பிரதமராக மோடி பயணம் மேற்கொண்டிருப்பது, இருநாட்டு உறவுகளை மேலும் வலுவடைய செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், மோடியின் இஸ்ரேல் பயணம் பாலஸ்தீனம் மீதான இந்திய உறவை சிதைத்து விடக்கூடாது என்பதும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

இஸ்ரேல் மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையே 25 ஆண்டுகாலமாக தூதரக ரீதியிலான உறவு நீடித்தாலும், இந்தியாவிலிருந்து இதுவரை எந்த பிரதமரும் இஸ்ரேலுக்கு பயணம் செய்ததில்லை. ஆனால், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேலின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் இந்தியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டனர். இதன் தாக்கமாக, கடந்த 2015-ஆம் ஆண்டு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். ஆனால், பாலஸ்தீன பிரச்சனை காரணமாக இந்திய பிரதமர் ஒருவர் கூட இஸ்ரேலுக்கு செல்லவில்லை.

இதை தகர்க்கும் விதமாக, பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக செவ்வாய் கிழமை இஸ்ரேல் சென்றார். டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான தளத்தில் மோடி தரையிறங்கினார். அங்கு அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் வரவேற்றனர். இதன்பின், நாஜி ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட யூதர்களுக்காக மேற்கு ஜெருசலேமில் அமைந்துள்ள நினைவிடத்தில் இருநாட்டு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் இந்த பயணம், பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் உறவில் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசிதரூர், “முதன்முறையாக இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு சென்றிருப்பதால் இரு நாட்டு உறவும் முழு முதிர்ச்சியை அடைந்துள்ளது. ஆனால், இந்த பயணம் பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது”, என தெரிவித்தார்.

இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் இஸ்ரேல் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான புரிந்துணர்வு கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, வேளாண்மை தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, சுற்றுலா, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து இயங்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் இருநாட்டு தூதரக உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் முக்கிய நினைவிடங்களை பார்வையிட்ட பின், வியாழக்கிழமை மாலை தனது பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க புறப்படுகிறார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Narendra modi in israel congress mp shashi tharoor says visit shows maturity but shouldnt affect palestinian cause narendra modi in israel congress mp shashi tharoor says vi

Next Story
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு; ஆகஸ்ட் 25-ல் தீர்ப்பு?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express