'பசு பக்தி' என்ற பெயரில் மனிதர்களை கொல்வதா? பிரதமர் மோடி எச்சரிக்கை

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி இன்று சென்றார். முதல் நிகழ்ச்சியாக ராஜ்சந்தர் தபால்தலை மற்றும் நாணயம் வெளியிட்டு விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து சபர்மதி ஆஸ்ரமத்தில் நடந்த நூற்றாண்டு விழாவில் மோடி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “காந்தி உண்மையான அஹிம்சையை பின்பற்றினார். பசு பக்தி என்ற பெயரில் மனிதர்களை கொல்வதை ஏற்க முடியாது. இதனை காந்தியும் ஏற்க மாட்டார். மனிதர்கள் கொல்லப்படுவது அஹிம்சை அல்ல. பசுவின் பெயரால் யாரையும் கொன்றால் அதனை ஏற்க முடியாது. மகாத்மா காந்தியை விட, வினோபாவேவை விட பசுக்கள் முக்கியம் என்று கூறவில்லை. வன்முறை இன்றி வாழ வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

வன்முறையற்ற பூமியில் வாழ்கிறோம் என்பதை நாம் ஏன் மறந்து விட்டோம்? வன்முறை என்றைக்கும் எதற்கும் தீர்வாகாது. காந்தி பிறந்த இந்த சமூகத்தில் வன்முறைக்கு இடம் இல்லை. சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது” என அவர் எச்சரித்துள்ளார்.

சமீபத்தில், டெல்லி – மதுரா பயணிகள் ரயிலில் சென்றுக் கொண்டிருந்த 3 முஸ்லிம் சகோதரர்களை 20-25 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கியதில் ஜுனைத் என்ற 17 வயது இளைஞர் கொல்லப்பட்டார். பசுமாமிசம் சாப்பிடுபவர்கள் என்று கூறி, அந்த கும்பல் அவர்களைத் தாக்கியதில், ஜுனைத் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close