சிக்கிம் மாநிலத்தில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு நடைபெற்ற பேரணி ஒன்றை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பபடும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: பாகிஸ்தானுடன் நல்லுறவை பேணவே இந்தியா விரும்புகிறது. எனினும், பாகிஸ்தான் அதற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறது. இன்றளவில் கூட காஷ்மீரில் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஒன்றை மட்டும் நான் உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். தற்போது ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காணும் என்று கூறினார்.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவிற்கு மற்ற நாட்டின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோல பாகிஸ்தான் பிரதமருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சாதாரணமாக கைகுலுக்கும் நிகழ்வாக அல்லாமல் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், பாகிஸ்தானின் நடவடிக்கையில் எந்தவித மாற்றத்தையும் காணமுடியவில்லை. பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவை சீர்குலைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறது.
வரும் காலங்களில் பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக் கொள்ளும் என நம்புகிறோம். அவ்வாறு, பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவர்களின் போக்கை மாற்றிக் காட்டுவோம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, இந்திய-சீன எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு குறித்தும், வளர்ச்சிப் பணிகள் குறித்தும் நடத்தப்பட்ட மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். மேலும், எல்லைக்கோட்டுப் பகுதியின் பாதுகாப்பு குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.