மியான்மரில் ராணுவத்துக்கும், ரோஹிங்யா போர் அமைப்புக்கும் இடையே கடுமையாக சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இதனால், ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இந்தியா, வங்காளதேசம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். இதற்கிடையே இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் 40,000 ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பாக இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் அரசுடன் பேச தொடங்கியது.
இந்தியாவில் ஜம்மு, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள முகாம்களில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகளாக தங்கி உள்ளனர். இவர்களை மத்திய அரசு வெளியேறும்படி அறிவுறுத்தியது. ஆனால், சண்டை நடப்பதால் அகதிகள் நாடு திரும்ப அஞ்சுகின்றனர். எனினும் இந்தியாவின் பாதுகாப்பு கருதி இவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதன்படி, உரிய அனுமதியின்றி தங்கியுள்ள ரோஹிங்யா அகதிகளை உடனடியாக வெளியேற்றுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ரோஹிங்யா அகதிகளான முகமது சலிமுல்லா, முகமது ஷாகிர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கத் தேவை இல்லை என்பதால் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 21 முதல் விரிவாக விசாரணை நடத்த உள்ளோம்.
விசாரணை நடைபெறும் காலத்தில் மனுதாரர் தரப்பினருக்கு ஏதாவது பிரச்னை உருவானால் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். மனுதாரர் தரப்பினர் விரிவான தகவல்களை வாதங்களாகவோ அல்லது அறிக்கையாகவோ முன்வைக்கலாம். ஆனால், உணர்வுப்பூர்வமாக வாதிட அனுமதிக்க மாட்டோம். எனவே, இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது
இந்த பிரச்சனையில் தேசிய பாதுகாப்பு, பொருளாதார நலன்கள், தொழிலாளர் நலன், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கவனிக்கவேண்டி உள்ளது. அதேநேரம் இதில் அவசர நிலை ஏதாவது ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தை உடனே அணுகலாம்” என்றனர்.
இதை மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஏற்றுக்கொண்டார். “எங்கள் பொறுப்பை நாங்கள் அறிவோம். அதே சமயம் இந்த பிரச்னை சர்வதேச அளவில் உள்ளதால், இது தொடர்பான எந்த உத்தரவையும் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக பிறப்பிக்கக் கூடாது” என்று அவர் கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், அடுத்த விசாரணை நடைபெறும்வரை ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்தவேண்டாம் எனவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.