காவிரியில் புதிய அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி கொடுத்தால் என்ன? என்றும், அணைகளை நிர்வகிக்க புதிய ஆணையம் அமைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறியது.
காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவை எதிர்த்து அதன் பாசன பரப்பில் உள்ள 4 மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில் கர்நாடகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஏற்கனவே தனது வாதங்களை முன்வைத்தார். ‘கர்நாடக தேவைக்கே காவிரி தண்ணீர் போதவில்லை. தமிழகம் சரியான நீர்வள மேலாண்மையை பின்பற்றவில்லை. மழை காலத்தில் வீணாகும் தண்ணீரை சேமிப்பதில்லை.’ என புகார்களை அடுக்கினார் நாரிமன்.
அடுத்து தமிழகம் சார்பில் வாதங்களை வைத்த மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ‘நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலம். கர்நாடகா உரிய அனுமதி இன்றி அணைகளை கட்டியும் பாசன பரப்பை அதிகரித்தும் இந்தப் பிரச்னையில் சிக்கலை உருவாக்குகிறது. காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி இதுவரை ஒரு ஆண்டுகூட கர்நாடகா தண்ணீர் தந்ததில்லை.
இந்த விஷயத்தில் மத்திய அரசும் நேர்மையாக நடக்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்றும் நோக்கில் மத்திய அரசின் நடவடிக்கை இல்லை.’ என சேகர் நாப்டே வாதங்களை முன்வைத்தார்.
தொடர்ந்து இன்றும் தமிழகம் சார்பில் சேகர் நாப்டே தொடர்ந்து வாதாடினார். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து தமிழகம் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘புதிய அணை கட்ட கர்நாடகாவை அனுமதித்தால் என்ன? அங்கிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாமே?’ என கேள்வி எழுப்பினர்.
சட்டத்திற்கு கட்டுப்பட்டு கர்நாடகம் கடந்த காலங்களில் தண்ணீர் திறந்து விடாததை சேகர் நாப்டே சுட்டிக்காட்டினார். அதற்கு நீதிபதிகள், ‘நாங்கள் உத்தரவிட்டால், கர்நாடகம் அதற்கு கட்டுப்பட்டு ஆகவேண்டும்’ என உறுதியாக கூறினர். காவிரியின் குறுக்கே அமைந்துள்ள அணைகளை புதிய ஆணையத்தின் நிர்வாகத்தில் கொண்டு வருவது குறித்தும் நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர். இதற்கு தமிழகம் தரப்பில், ‘தண்ணீர் கிடைக்கும் வகையிலான தீர்வுக்கு’ உடன்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.