கர்நாடக சிறைத்துறைக்கு புதிய டி.ஜி.பி.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தர இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயண ராவ் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சிறைத்துறைக்கு புதிய டி.ஜி.பி-ஆக என்.எஸ்.மெகரிக்…

By: July 18, 2017, 5:20:25 PM

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தர இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயண ராவ் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சிறைத்துறைக்கு புதிய டி.ஜி.பி-ஆக என்.எஸ்.மெகரிக் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்தே, சிறைத்துறை விதிகளை மீறி அவருக்கு அதிகாரிகள் சிறப்பு வசதிகள் செய்து தருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், அதற்கு சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, காவல் துறை ஐ.ஜி. ஆர்.கே. தத்தாவிற்கு கடந்த 12-ஆம் தேதி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தருவதற்காக சிறைத்துறை உயரதிகாரி ரூபாய் 2 கோடி லஞ்சம் பெற்றதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதில், சிறைத்துறை டி.ஜி. சத்யநாராயணா ராவ், சசிகலாவிற்கு சிறப்பு அந்தஸ்துகள் செய்துகொடுப்பதற்காக ரூபாய் 2 கோடி லஞ்சம் பெற்றதாக தன் உயரதிகாரி மீதே குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலா விரும்பும் உணவுகளை தயார் செய்வதற்காக, அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் சிறைத்துறை விதிமுறைகளை வளைத்து சமையலறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், உணவுப்பொருட்களை சமைத்துத் தருவதற்காக சிறையில் உள்ள பெண் ஒருவரும் நியமிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

இதுகுறித்து பதிலளித்த குற்றம்சாட்டப்பட்ட சத்யநாராயணா, “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்யட்டும். இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பொறுப்பு அவற்றை எழுப்பிய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவிற்கே உள்ளது. சிறையில் சசிகலாவுக்கென தனி சமையலறை வசதி செய்து தரப்படவில்லை.”, என கூறினார்.

மேலும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சத்யநாராயணா, ரூபாவிற்கு தான் இரண்டு முறை மெமோ அனுப்பியதாகவும், அதற்கு பழிவாங்கும் முயற்சியாகவே தன் மீது இந்த குற்றச்சாட்டுகளை அவர் எழுப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி. ரூபா, “சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அதுகுறித்து கர்நாடக அரசு பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். எனக்கு தனிப்பட்ட முறையில் யாருடனும் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இந்த குற்றச்சாட்டை எழுப்பியிருப்பதால் எனக்கு எந்த லாபமும் இல்லை”, என கூறினார்.

சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்துதரப்பட்டதாக எழுந்த புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புகார் எழுப்பிய டி.ஐ.ஜி. ரூபா மற்றும் குற்றம்சாட்டப்பட்ட டி.ஜி.பி.சத்யநாராயண ராவ் ஆகியோர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.யாக என்.எஸ். மெகரிக் என்பவர் செவ்வாய் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:New dgp is appointed for karnataka prison department

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X