சீன வீரர்களுக்கு இந்திய வணக்கம் குறித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாடம் நடத்தியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது, அதில், அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய-சீன எல்லையில் கைகளை கூப்பி, ’நமஸ்தே’ என்று சீன வீரர்களிடம் கூறுகிறார். இதையடுத்து தான் தெரிவித்த வணக்கத்திற்கான அர்த்தத்தை, சீன வீரர்களிடம் கேட்கிறார். அதாவது, ‘நமஸ்தே என்றால் என்ன தெரியுமா?’ என்றார்.
அப்போது பதில் கூற வந்த இந்திய வீரர்களை சிறிது நேரம் அமைதியாக இருக்குமாறு கூறுகிறார். பின்னர் சீன வீரர்கள் ஓரளவு சரியாக அர்த்தம் கூறுகின்றனர். அதாவது, ’தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’ என்பதாகும் என்கின்றனர்.
அதேபோல் சீன மொழியில் எவ்வாறு பேசுவது என்று நிர்மலா சீதாராமன் கேட்கிறார். அதற்கு சீன வீரர்கள் பதிலளிக்கின்றனர். இதையடுத்து ’நி ஹவோ’ என்று சீன பாஷையில் அவர்களிடம் நிர்மலா சீதாராமன் வணக்கம் கூறுகிறார்.
முன்னதாக, டோக்லாம் எல்லையில் சீன வீரர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதற்கு, இந்திய வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எல்லையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், எல்லைப் பகுதியில் இந்திய வீரர்களின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.