காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களிடம் என்ஐஏ விசாரணை...

பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஹபீஸ் சயீதிடம் இருந்து பிரிவினைவாதிகள் நிதி பெறுவதாக புகார் எழுந்தது.

ஐம்மு காஷ்மீரில் வன்முறைப் போராட்டங்களை அரங்கேற்றுவதற்காக பாகிஸ்தான் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிடம் இருந்து பணம் பெறுவதாக, சையது அலிஷா கிலானி உள்ளிட்ட 4 பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிரான புகார் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணையை மேற்கொண்டுள்ளது.

ஹுரியத் தலைவர் கிலானியை தவிர்த்து, அந்த அமைப்பைச் சேர்ந்த நயீம் கான் ( தொலைக்காட்சியில் ஒன்றில் ஸ்டிங் ஆபரேஷனில் பாகிஸ்தான் தீவிரவாத குழுவிடம் இருந்து பணம் பெறுவதாக ஒப்புக் கொண்டவர்), ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் பரூக் அகமது தார் , தெஹ்ரீக்-இ-ஹுரியத் தலைவர் காஜி ஜாவேத் பாபா ஆகியோர் பணம் பெற்றது குறித்து விளக்கம் அளிக்குமாறு என்ஐஏ கேட்டுக்கொண்டது.

அதன்படி, அவர்கள் மூவரிடமும் தேசிய புலனாய்வு அமைப்பு தனித்தனியாக விசாரணை மேற்கொண்டது. மேலும், பிரிவினைவாத தலைவர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்பது குறித்து என்ஐஏ தீவிரமாக விசாரணை நடத்தியது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசுவது, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது, அரசு கட்டிடங்களுக்கு தீவைப்பது போன்ற வன்முறைப் போராட்டங்களில் இளைஞர்களை ஈடு படுத்துவதற்காக பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஹபீஸ் சயீதிடம் இருந்து பிரிவினைவாதிகள் நிதி பெறுவதாக புகார் எழுந்தது.

இது குறித்து என்ஐஏ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் முன்னதாக நடத்தப்பட்ட வன்முறை சம்பவம், தாக்குதல் சம்பவம் உள்ளிட்டவற்றில் தொடர்புடையதாக கருதப்படும் நபர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள 150 பேரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டன என்று கூறினார்.

இதனிடையே, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பிடம் இருந்து பணம் பெற்றதாக கூறிய நயிம் கானை ஹுரியத் அமைப்பில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அந்த அமைப்பின் தலைவர் கிலானி தெரிவித்தார்.

இது தொடர்பாக நயின் கான் கூறும்போது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவானது எடிட் செய்யப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே அவர்கள் வெளியிட்டுள்ளனர். அவர்கள் அந்த முழு வீடியோவையும் வெளியிட வேண்டும்.காஷ்மீர் பிரச்சனைகள் குறித்து அவதூறான தகவல்களை பரப்புவதே ஊடகங்கள் செய்து வருகின்றன என்று தெரிவித்தார்.

×Close
×Close