சட்டப்பேரவைக்குள் வெடிபொருள்: என்.ஐ.ஏ விசாரணை தொடக்கம்

மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி பேரவைக்குள் வெடிபொருள் வந்தது எப்படி என்ற கோணத்தில் என்ஐஏ விசாரணைக் குழுவினர் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்குள் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருள் குறித்து தேசிய புலனாய்வுக் அமைப்பினர் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்குள் எதிர்க்கட்சித் தலைவர் ராம் கோவிந்த் சவுத்ரி இருக்கைக்கு அருகில் பேப்பரில் மடித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற பவுடரை கடந்த புதன்கிழமையன்று சுகாதார ஊழியர் ஒருவர் எடுத்தார்.

இந்த பவுடர் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், அந்த பவுடர், அபாயகரமான பிளாஸ்டிக் வெடிபொருள் எனத் தெரியவந்துள்ளது. பென்டாஎரித் ரிட்டோல் டெட்ராநைட்ரேட் அல்லது பிஇடிஎன் எனப்படும் அந்த வெடிபொருள் மிகவும் சக்திவாய்ந்த வெடி பொருளாகும்.

இந்த வெடிபொருள் தானாக வெடிக்காது. வெப்பம் அல்லது அதிர்வுகளை ஏற்படுத்தி இதை வெடிக்கச் செய்வதற்கு மற்றொரு உபகரணம் தேவை. உதாரணமாக, செல்போனை வைத்துக் கூட இதனை வெடிக்க வைக்க முடியும் என வெடிகுண்டு வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த வெடிபொருளை மோப்ப நாய்கள், மாநில போலீஸ் பாதுகாப்புப் படையினரால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கூடுதல் வேதனையான விஷயம்.

ராணுவம் மற்றும் சுரங்கத் தொழிலில் பிஇடிஎன் சட்டப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. எக்ஸ்ரே மற்றும் பிற உபகரணங்களால் கூட இந்த வெடிபொருளை கண்டறிவது கடினம் என்பதால் தீவிரவாதிகளும் இதனை பயன்படுத்துகின்றனர். கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்ற தாக்குதலில் தீவிரவாதிகளால் இதே வெடிபொருள் தான் பயன்படுத்தப்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்குள் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “இந்த வெடிபொருள் 150 கிராம் எடை இருந்தது. ஆனால், சட்டப் பேரவை கட்டிடத்தை தகர்க்க 500 கிராம் போதுமானதாகும்” என வல்லுனர்கள் குறிப்பிட்டதாக தெரிவித்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு சட்டப்பேரவை பரிந்துரை செய்துள்ளது என்றார்.

இதையடுத்து, உத்தரப்பிரதேசம் மாநிலம் வந்த என்ஐஏ விசாரணைக் குழுவினரிடம் வெடிபொருள் தொடர்பான அனைத்து விஷயங்களும் விவரிக்கப்பட்டன. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்குள் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருள் குறித்து தேசிய புலனாய்வுக் அமைப்பினர் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி பேரவைக்குள் வெடிபொருள் வந்தது எப்படி என்ற கோணத்தில் அவர்கள் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

×Close
×Close