பிரதமர் மோடியின் அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் உள்பட நான்கு பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் தவிர புதியவர்கள் 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
கோவா மாநில முதல்வராக பதவியேற்கும் வகையில் தனது பதவியை மனோகர் பாரிக்கர் ராஜினாமா செய்தார். அதேபோல், குடியரசுத் துணைத் தலைவராக தேர்வான வெங்கையா நாயுடுவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். மற்றொரு அமைச்சர் அனில் தவே காலமானார். இதையடுத்து, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மூன்று இடங்கள் காலியாகின. அதேசமயம், பாஜக மேலிட அறிவுறுத்தலின் பேரில், கல்ராஜ் மிஸ்ரா, சஞ்சீவ் குமார் பல்யான், பக்கன் சிங் குலஸ்தே உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதனால், மத்திய அமைச்சரவையில் 9 காலியிடங்கள் ஏற்பட்டன.
அதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளவும், விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பிரதமர் மோடியின் அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றியமைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதேபோல், ஏற்கனவே இணையமைச்சர்களாக இருந்த நான்கு பேர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டனர். அவர்களுக்கு ராம்நாத் கோவிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வர்த்தகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டனர்.
அதேபோல், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவ் பிரதாப் சுக்லா, பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார் சௌபே, மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திர குமார், பீகாரை சேர்ந்த ராஜ்குமார் சிங், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் குமார் ஹெக்டே, முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரி ஹர்தீப் சிங் பூரி, ராஜஸ்தானை சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கன்னன்தானம், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சத்ய பால் சிங் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் எம்.பி.-க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.