பட்டமளிப்பு விழாக்களில் வெளிநாடுகளின் தாக்கத்தால் நாம் அணியும் அங்கி மற்றும் தொப்பியை தூர எறிந்துவிட்டு, இந்திய கலாச்சாரத்தை உணர்த்தும் ஆடைகளை அணிய வேண்டும் என, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள ஐ.ஐ.எஃப்.டி எனப்படும் வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். பட்டங்களை வழங்குபவர்கள் மாணவர்களைப் போலவே நீண்ட அங்கி மற்றும் தொப்பி அணிவது வழக்கம். ஆனால், நிர்மலா சீதாராமன் நீல நிற புடவையில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து ஐ.ஐ.எஃப்.டி. செயல்பட வேண்டும்.”, என தெரிவித்தார்.
மேலும், ”பட்டமளிக்கும்போது அணியும் கவுன் மற்றும் தொப்பியால் நான் எப்போது சௌகரியமாக உணர்ந்ததில்லை. அதற்காக, நான் அதனை மதிக்கவில்லை என்று அர்த்தம் ஆகாது. வெளிநாட்டு வர்த்தக கொள்கையை நாம் எவ்வாறு மறு சீராய்வுக்கு உட்படுத்துகிறோமமோ, அதேபோன்று இதனையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.”, என கூறினார்.
மேலும், கான்பூர் ஐ.ஐ.டி.யில் பட்டமளிப்பு விழாவில் பெண்கள் சுடிதார் அணிவதையும், ஆண்கள் பைஜாமா அணிவதையும் கூறினார். ஐ.சி.எஸ்.இ. எனப்படும் கல்வி நிறுவனத்திலும், ‘இந்திய’ பாரம்பரியத்தை உணர்த்தும் வகையிலேயே பட்டமளிப்பு விழாவில் உடைகள் அணியப்படுவதாக பேசினார். ஐ.சி.எஸ்.இ. கல்வி நிறுவனத்தில், ஆண்களுக்கு குர்தா பைஜாமாவும், பெண்களுக்கு புடவையும் பட்டமளிப்பு விழாவில் அணிகின்றனர். அதுமட்டுமல்லாமல், அந்த கல்வி நிறுவனத்தில் கைத்தறி துண்டு ஒன்றும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்மலா சீதாராமன் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷூம் இதேபோன்று ஒரு நிகழ்வில் பேசியுள்ளார். இந்திய வன மேலாண்மை நிறுவனத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் நாம் ஏன் காலணியாதிக்க உடைகளை பின்பற்றுகிறோம்? புரோகிதர் போன்றோ போப் போன்றோ உடைகளை அணியாமல் எளிமையான இந்திய உடைகளை பட்டமளிப்பு விழாவில் அணியலாமே”, என கேள்வி எழுப்பினார்.