மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவை மூன்றாவது முறையாக கடந்த 3-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வர்த்தகத்துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அதேபோல், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவ் பிரதாப் சுக்லா, பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார் சௌபே, மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திர குமார், பீகாரை சேர்ந்த ராஜ்குமார் சிங், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் குமார் ஹெக்டே, முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரி ஹர்தீப் சிங் பூரி, ராஜஸ்தானை சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கன்னன்தானம், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சத்ய பால் சிங் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூடுதலாக கவனித்து வந்த பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமனுக்கு ஒதுக்கப்பட்டது. கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்றதும் அவரிடம் இருந்த பாதுகாப்புத் துறையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூடுதலாக கவனித்து வந்தார். அந்த துறை நிர்மலா சீதாராமனுக்கு ஒதுக்கப்பட்டது. அவர் ஏற்கனவே கவனித்து வந்த வர்த்தகத்துறையில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் பாதுகாப்புத் துறை அவருக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக இன்று பொறுபேற்றுக் கொண்டார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.