பீகார் மாநில மக்களுக்கு நிதிஷ்குமார் துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநர் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில அரசியலில் அண்மை காலமாகவே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. முன்னாள் ரயில்வே அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் தலைவருமான லாலு, அவரது மகனும் துணை முதல்வராக இருந்த தேஜஸ்வி மற்றும் அவரது குடும்பத்தார் வீடுகளில் அடுத்தடுத்து சிபிஐ சோதனை. சோதனையை தொடர்ந்து, முதல்வர் நிதிஷ் – லாலு இடையேயான உறவில் சுமூகமின்மை. பாஜக-வுக்கு ஆதரவான நிதிஷ்குமார் கருத்துக்கள் என பல்வேறு அரசியல் திருப்பங்கள் பீகார் மாநில அரசியலில் நாள்தோறும் அரங்கேறி வந்தன.
இந்நிலையில், தனது முதல்வர் பதவியை திடீரென நேற்று ராஜினாமா செய்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவை துணை முதல்வராக வைத்துக்கொண்டு முதல்வர் பதவியில் தொடர தான் விரும்பவில்லை என்றார். மேலும், ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் வழங்கினார்.
இதனையடுத்து, பீகார் மாநில அரசியலில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சூழலில், பாஜக-வுடன் கரம் கோர்த்த நிதிஷ், அதன் கூட்டணிக் கட்சிகள், சுயேச்சை எம்எல்ஏ-க்களுடன் கூட்டணி அமைத்தது. மீண்டும் ஆட்சியமைக்கும் பொருட்டு, 132 எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்துடன் நள்ளிரவில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனையேற்ற ஆளுநர், நிதிஷ்குமாரை ஆட்சியமைக்க அழைத்தார். அதன்படி, ராஜினாமா செய்து 24 மணி நேரத்துக்குள்ளாகவே பீகார் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார். அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர், பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளார்.
இதற்கு கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி எனவும், மூன்று நான்கு முன்பிருந்தே மெகா கூட்டணியை உடைக்க திட்டமிட்டார் எனவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் சாடியுள்ளார்.
அதேபோல், நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி, பீகார் மாநில மக்களுக்கு துரோகம் செய்து விட்டார் என குற்றம் சாட்டியுள்ள ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், அதன் பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டபேரவைத் தேர்தலை நினைவு கூர்ந்த லாலு, “நிதிஷ்குமார் கட்சிக்கு 71 எம்எல்ஏ-க்கள் மட்டும் தான் இருந்தனர். நான் நினைத்திருந்தால் அவர் முதல்வராகியிருக்க முடியாது” என்றும் காட்டம் தெரிவித்தார்.
எங்களது கட்சியை ஓரங்கட்டுவதற்காக பாஜக – ஐக்கிய ஜனதாதளக் கட்சி இடையே சில மாதங்களாகவே சதித் திட்டம் தீட்டப்பட்டு வந்தது. பல சந்தர்ப்பங்களில் மோடியை நிதிஷ்குமார் சந்தித்துள்ளார். இருவரும் மதிய உணவு அருந்தியுள்ளனர். இன்றைய தினம் அரங்கேறிய சம்பவங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை என்றும் லாலயு குற்றம் சாட்டியுள்ளார்.