நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி; கூட்டணியை உடைக்க 3 மாதங்களாக திட்டம்: ராகுல் சாடல்

நிதிஷ்குமார், மூன்று - நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே மெகா கூட்டணியை உடைக்க திட்டமிட்டு வந்தார் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடுமையாக சாடியுள்ளார்.

நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி என்றும், மூன்று – நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே மெகா கூட்டணியை உடைக்க அவர் திட்டமிட்டு வந்தார் எனவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடுமையாக சாடியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து பாஜக-வை வீழ்த்தியது.

ஐக்கிய ஜனதாதளத்தின் நிதிஷ்குமார் முதல்வராகவும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இருந்தனர். கூட்டணி ஆட்சி பதவியேற்றது முதலே, நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவுக்கு கருத்து வேறுபாடு நிலவி வந்தது. மேலும், அவர் பாஜக-வுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டது.

இதனிடையே, லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழல் புகாரில் சிக்கினர். தொடர்ந்து, தேஜஸ்வி பதவி விலக வேண்டும் எனவும், ஊழல் புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நிதிஷ் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்த சூழலில், தனது முதல்வர் பதவியை நிதிஷ்குமார் திடீரென நேற்று ராஜினாமா செய்தார்.

கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளக் கட்சி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், சுயேச்சை எம்எல்ஏ-க்களுடன் கூட்டணி அமைத்தது. மீண்டும் ஆட்சியமைக்கும் பொருட்டு, 132 எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்துடன் நள்ளிரவில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரினார். இதனையடுத்து, ராஜினாமா செய்து 24 மணி நேரத்துக்குள்ளாகவே பீகார் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார். பாஜக-வின் சுஷில்குமார் மோடி துணை முதல்வரானார்.

இந்நிலையில், நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி என்றும், மூன்று – நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே மெகா கூட்டணியை உடைக்க அவர் திட்டமிட்டு வந்தார் எனவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நிதிஷ்குமார் ஒரு சுயநலவாதி. அவருடையே சுய நலத்துக்காகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இது இந்திய அரசியலில் இருக்கும் முக்கிய பிரச்னை. மதவாத சக்திக்கு எதிராக பிகார் மக்கள் வாக்களித்தனர். ஆனால், தனது அரசியல் லாபத்துக்காக மீண்டும் அந்த சக்திகளுடன் நிதிஷ் மீண்டும் சேர்ந்துள்ளார். நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி என்றும், மூன்று – நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே மெகா கூட்டணியை உடைக்க அவர் திட்டமிட்டு வந்தது எங்களுக்கு தெரியும் என்றார்.

×Close
×Close