பிகார் முதல்வராக நிதிஷ் இன்று மீண்டும் பதவியேற்பு

பிகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாஜக கூட்டணி ஆதரவுடன் இன்று மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

பிகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாஜக கூட்டணி ஆதரவுடன் இன்று மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

பிகார் மாநிலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து பாஜக-வை வீழ்த்தியது.

ஐக்கிய ஜனதாதளத்தின் நிதிஷ்குமார் முதல்வராகவும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியை சேர்ந்தவரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இருந்தனர். கூட்டணி ஆட்சி பதவியேற்றது முதலே, நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவுக்கு கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்த சூழலில், தேஜஸ்வியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. பினாமி சொத்துகள் இருப்பதாகக் கூறி ஆவணங்களையும் கைப்பற்றின. அதேபோல், லாலுவின் வீடு, அவரது மகள் மிசா பாரதி மற்றும் அவரது கணவரது வீடு அலுவலகங்களிலும் சிபிஐ சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையையடுத்து, பிகார் மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

லாலு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகளால் கடும் அதிருப்தி அடைந்த நிதிஷ்குமார், லாலுவுடனான உறவை துண்டிக்க முடிவு செய்ததாக கூறப்பட்டது. மேலும், தேஜஸ்வி பதவி விலக வேண்டும் எனவும், ஊழல் புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நிதிஷ் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். அதேசமயம், பாஜக-வுடன் புதிய கூட்டணியை நிதிஷ் அமைக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியானது.

இதனிடையே, நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதாதள எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு பின்னர், ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட தேஜஸ்வி யாதவை துணை முதல்வராக வைத்துக்கொண்டு முதல்வர் பதவியில் தொடர தான் விரும்பாததை வெளிப்படையாக நிதிஷ் கூறினார். மேலும், பிகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் வழங்கினார்.

நிதிஷ் கூட்டத்துக்கு முன்னர் நடைபெற்ற ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லாலு பிரசாத் யாதவ், “தேஜஸ்வி யாதவ் பதவி விலக மாட்டார். தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என நிதிஷ்குமார் சொல்லவில்லை. எனக்கும் நிதிஷ் குமாருக்கும் எந்தவித மனக்கசப்பும் இல்லை. ஊடகங்கள் எங்களது கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றன” என கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

நிதிஷ் ராஜினாமாவை தொடந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி,”அரசியல் வேறுபாடுகளை மறந்து ஊழலுக்கு எதிராக இணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்” என தனது டுவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பாஜக-வுடன் நிதிஷ், கூட்டணி அமைப்பது உறுதியானது. மேலும், நிதிஷ்குமாருக்கு ஆதரவளிப்போம் என பாஜக-வினர் வெளிப்படையாகவே அறிவித்தனர்.

பிகார் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தம் 243 இடங்கள். ஆட்சியமைப்பதற்கு மொத்தம் 122 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளக் கட்சிக்கு அங்கு 71 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். எனவே, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி (2), லோக் ஜனசக்தி கட்சி (2), இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா (1) ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க, அம்மாநில ஆளுநரை சந்தித்து, ஆட்சியமைக்க நள்ளிரவில் நிதிஷ் உரிமை கோரினார். இக்கட்சிகள் மற்றும் மூன்று சுயேச்சைகளின் ஆதரவுடன் 132 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தற்போது நிதிஷ்குமாருக்கு உள்ளது.

இந்நிலையில், புதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள நிதிஷ்குமார், இன்று காலை 10 மணியளவில் பிகார் மாநில முதல்வராக ஆறாவது முறையாக மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

×Close
×Close